டிராக்கில் மாட்டிய டிராக்டர்! பெரும் விபத்தில் இருந்து தப்பியது கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ்!

Published:

sengottai train track trakctor - 2026

செங்கோட்டை : ரயில் வரும் பாதையில் டிராக்கில் ஒரு டிராக்டர் மாட்டிக் கொண்டது, ரயில் டிரைவரின் சமயோசிதத்தால், பெரும் விபத்தில் இருந்து தப்பியது கொல்லம் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில்.

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து கடந்த 22 ஆம் தேதி மதியம் 06028 என்ற எண் கொண்ட கொல்லம் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் 2.40 மணி அளவில் சுமார் 300 பயணிகளுடன் தமிழக பகுதியான செங்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. ரயில் எஸ் வளைவு அருகில் வந்த போதுதான், அந்த ரயிலை ஓட்டி வந்த டிரைவர் ஜான் கென்னடி என்பவர், திடீர் அதிர்ச்சிக்கு உள்ளானார்.

ரயில் பாதையில், எஸ் வளைவு பகுதியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் குறுக்கே ஒரு டிராக்டர் நிற்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, அவர் அவசர அவசரமாக ரயிலை சுமார் 100 மீட்டர் தொலைவில் நிறுத்தி விட்டு செங்கோட்டை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் மனோகரனுக்கு தகவல் தெரிவித்தார்.

இதை அடுத்து செங்கோட்டை ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் விரைந்து வந்து தண்டவாளத்தின் குறுக்கே நின்ற டிராக்டரை பறிமுதல் செய்து டிராக்டரை ஓட்டி வந்த தேவராஜன் மகன் சரவணன் (25) என்பவரை கைது செய்தனர்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

டிராக்டர் உடனே அப்புறப்படுத்தப் பட்டு, கொல்லம் தாம்பரம் ரயில் உடனடியாக அங்கிருந்து செங்கோட்டை நோக்கி அனுப்பப் பட்டது. கைது செய்யப்பட்ட டிராக்டர் ஓட்டுநர் சரவணனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ரயில் எஞ்சின் ஓட்டுனரின் சமயோசித திறமையால், மலைப் பாதையில் வந்து கொண்டிருந்த கொல்லம் தாம்பரம் எக்ஸ்பிரஸ் பெரிய விபத்தில் இருந்து தப்பியது. ரயில் ஓட்டுனரை பயணிகள் வெகுவாக பாராட்டினர். இந்தச் சம்பவம் தமிழக-கேரள எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related articles

Recent articles

spot_img