14.5 கிலோ தங்கம் மாயம்: திருச்சி சுங்கத் துறை அலுவலகத்தில் திருட்டு

திருச்சி: திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் நள்ளிரவு 14.5 கிலோ தங்க நகைகள் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள மத்திய கலால்-சுங்க ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 14.5 கிலோ தங்கம் மாயமானது சனிக்கிழமை நள்ளிரவு கண்டறியப்பட்டது. இதை அடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப் படும் தங்கம், விலை உயர்ந்த பொருள்கள் அனைத்தும் திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள மத்திய கலால்-சுங்க ஆணையர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்படும். பறிமுதல் செய்யப்படும் தங்கத்தின் மதிப்பு ரூ. 1 கோடிக்கு மேல் இருந்தால் அதைக் கடத்தி வரும் நபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு முடியும் வரை அந்த தங்கம் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்படும். அவ்வகையில், சில மாதங்களுக்கு முன்னர் முத்துப்பேட்டையில் காரில் ஒருவர் கடத்தி வந்த 22 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டன. இதுவரை 75 கிலோ தங்கம் வரை பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருக்கிறதாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு சிங்கப்பூரில் இருந்து டைகர் ஏர்வேஸ் விமானத்தில் வந்த நவாஸ்கான் என்பவர் கொண்டு வந்த 7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அதை சுங்கத் துறை ஆணையர் கே.சி. ஜானி சனிக்கிழமை நள்ளிரவு பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கச் சென்றார். அப்போது, ஏற்கெனவே அதில் வைக்கப்பட்டிருந்த 75 கிலோ தங்கத்தில் 14.5 கிலோ தங்கம் திருடப்பட்டிருப்பது அவருக்குத் தெரிந்தது. இதையடுத்து அவர், சனிக்கிழமை நள்ளிரவு 12.30க்கு திருச்சி கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரை அடுத்து காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அங்கே சென்று அனைவரிடமும் விசாரணை நடத்தினர். மேலும், சுங்கத் துறை அலுவலகத்தில் வெளியே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். திருடப்பட்டுள்ள தங்கத்தின் மதிப்பு சுமார் 3.50 கோடி ரூபாய் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்படவில்லை என்பதால், அங்கே பணிபுரியும் அதிகாரிகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.