கணவனும் கைவிட்டு கள்ளக் காதலனும் ஏற்க மறுத்ததால் இளம்பெண் தீக்குளிப்பு

நெல்லை: கணவனும் கைவிட்டு, கள்ளக் காதலனும் ஏற்க மறுத்ததால் தீக்குளித்தேன் என்று இளம்பெண் ஒருவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள கனக நாயனார் கம்புகிடை தெருவைச் சேர்ந்தவர் முருகன் என்பவரின் மனைவி தீபா(24). இவர்களுக்கு தர்ஷினி என்ற 2 வயதுக் குழந்தை உள்ளது. பாளையங்கோட்டையை அடுத்த தியாகராஜ நகரில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் தீபா வேலை செய்து வந்தார். இந்நிலையில் தீபாவுக்கும், கீழநத்தத்தைச் சேர்ந்த வெற்றிவேல்(22) என்பவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. வெற்றிவேல் பெருமாள்புரத்தில் உள்ள சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலை செய்து வருகிறார். இவர்களது கள்ளக்காதல் முருகனுக்கு தெரிய வந்ததை அடுத்து அவரை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதில், மனைவியைப் பிரிந்து சென்றார் முருகன். இதனால் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்த தீபா, வெற்றிவேலிடம் நமது பழக்கத்தால்தான் என் கணவர் என்னைப் பிரிந்து சென்றார். குழந்தையும் நானும் தனியாக உள்ளோம். நீதான் என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், அதற்கு வெற்றிவேல் மறுத்துள்ளார். இதனால் மனம் உடைந்த தீபா நேற்று காலை வெற்றிவேல் வேலை செய்யும் பெருமாள்புரத்தில் உள்ள சவுண்ட் சர்வீஸ் கடையின் முன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக செயல்பட்டு, நெல்லை அரசு மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தீபா, மாஜிஸ்திரேட்டிம் அளித்த வாக்குமூலத்தில், வெற்றிவேல் என்பவரின் அம்மாவுக்கும், என் அம்மாவுக்கும் உள்ள பழக்கத்தில் எனது வீ்ட்டுக்கு வெற்றிவேல் அடிக்கடி வந்து சென்றார். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. நான் அவரை நேசித்தேன். அவரும் என்னுடன் அன்பாகப் பேசிப் பழகினார். அவரை என்னால் மறக்க முடியவில்லை. அவருடன் சேர்ந்து வாழ விரும்பினேன். இதனால் என் கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வெற்றிவேலிடம் கேட்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். கணவர் பிரிந்து விட்ட நிலையில், வெற்றிவேலும் ஏற்க மறுத்ததால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து தீக்குளித்தேன் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக பெருமாள்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.