தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம் : போலீசில் புகார் அளித்த பெண் வீட்டார்

திருவண்ணாமலை: செங்கத்தில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஒருவர் ஓட்டம் பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் போலீசில் புகார் அளித்தனர். செங்கம் துக்கா பேட்டையைச் சேர்ந்த முனுசாமியின் மகன் செந்தில்குமார்(26) மின்வாரிய இளநிலைப் பொறியாளராகப் பணியில் உள்ளார். செந்தில்குமாருக்கும் ஆற்காட்டைச் சேர்ந்த முதுநிலைப் பட்டதாரிப் பெண் ஒருவருக்கும் பெற்றோரால் திருமணத்துக்கு நிச்சயிக்கப்பட்டு, ஏற்பாடு நடைபெற்றது. புதன் இன்று காலை 6–7.30 மணி அளவில் முகூர்த்தம் நிச்சயிக்கப்பட்டு பத்திரிக்கை அடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதை அடுத்து, நேற்று இரவு துக்காப்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் மணமக்கள் அழைப்பு நடந்தது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். இதன் பின்னர், இன்று காலை 4 மணி அளவில் மணமகன் செந்தில்குமார், புரோகிதரை போன் மூலம் தொடர்பு கொண்டு வெளியில் சென்றுவிட்டு வருவதாகக் கூறி வெளியில் சென்றார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் அவர் மண்டபத்துக்குத் திரும்பவில்லை. முகூர்த்த நேரம் நெருங்கிய நிலையில், மாப்பிள்ளையை பல இடங்களில் தேடியும் போனில் தொடர்பு கொண்டும், அவர் அகப்படவில்லை. முகூர்த்த நேரம் கடந்த நிலையில், மணமகன் மண்டபத்துக்கு வராததால், அந்தத் திருமணம் நின்று போனது. இதனால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பெண் வீட்டார், செங்கம் போலீசில் புகார் அளித்தனர். அவர்களது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பூபதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். திருமணம் பிடிக்காமல் செந்தில்குமார் ஓடி விட்டாரா அல்லது அவரை யாரேனும் கடத்திவிட்டார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.