கழிவறையை சுத்தம் செய்ய மாணவர்களை வற்புறுத்திய பள்ளி நிர்வாகி உள்பட 8 பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்யுமாறு மாணவர்களை வற்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்ட புகாரை அடுத்து, பள்ளி நிர்வாகி, ஆசிரியர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். களக்காடு அருகே கீழப்பத்தைபண்டிதன்குறிச்சியில் அரசு உதவிபெறும் தனியார் உயர்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கே பள்ளி கழிவறையில் உள்ள அடைப்புகளை சுத்தம் செய்யுமாறு மாணவ, மாணவியரை ஆசிரியைகள் வியாழக்கிழமை வற்புறுத்தினராம். இதுகுறித்து மாணவர்கள் பெற்றோரிடம் புகார் தெரிவிக்கவே, கீழவடகரை, கீழப்பத்தை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெற்றோர்கள், காவல்நிலையத்தில் அளித்த புகார் அளித்தனர். இதையடுத்து, பள்ளி நிர்வாகி மற்றும் 7 ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.