பாலிமர் டிவி அதிபர் மீது பொய்வழக்கு: ராமதாஸ் கண்டனம்

சென்னை:
பாலிமர் டிவி அதிபர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குக்கு கண்டனம் தெரிவிப்பதாக பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்,
சேலத்தில் அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவன அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழையும்படி பாலிமர் தொலைக்காட்சி ஊழியர்களைத் தூண்டியதாக அத்தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 18 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனம் இலவசமாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. மக்கள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பை முடக்கிய கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனம் அடுத்த கட்டமாக மற்ற தொலைக்காட்சி ஒளிபரப்பையும் முடக்க முயல்கிறது.
இதை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்ததுடன், அவர்களைத் தூண்டியதாக கல்யாணசுந்தரம் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆட்சியாளர்களின் தவறுகளைத் தட்டிக் கேட்டால் பொய்வழக்குப் போடும் தமிழக அரசின் கலாச்சாரம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. பழிவாங்கும் போக்கை விடுத்து பாலிமர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் கல்யாணசுந்தரம் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். – என்று கூறியுள்ளார்.