கோவை: சபரிமலை குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பக்தர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஊட்டி செல்லும் வழியில், கோவை ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரம்பரியம், பாரம்பரியமாக வழிபாட்டு தலங்களுக்கு என்று முறைகளை கடைபிடித்து வருகிறார்கள். அந்த முறைகள் அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்பும் போது இந்தத் தீர்ப்பு மிகப்பெரிய ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் பக்தர்களுக்கு உருவாக்கி இருக்கிறது என்று அறிய முடிகிறது.
கேரள தேவசம்போர்டு மேல் முறையீடு செய்ய இருப்பதாக அறிகிறேன். கோவில்களில் வழிபாட்டு முறைகளை அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது…. என்றார்.
மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்துக் கூறிய போது, மத்திய அரசு முடிவு செய்ய எதுவுமில்லை. மாநில அரசு தான் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதிமுக.,வினரின் போராட்டத்தின் பின்னணியில் பாஜக., இருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளது குறித்து கருத்து தெரிவித்த அவர், தமிழகம் முழுதும் எந்த ஓர் அரசியல் தொடர்பானதாக இருந்தாலும் பா.ஜ.க.,வை மையப்படுத்தியே அரசியல் நடத்த முடியும் என்ற நிலை உள்ளது. இதை அனைத்து அரசியல் கட்சியினரும் உணர்ந்து இருக்கின்றனர். பாஜக., தமிழக அரசியலில் மையப்புள்ளியாக இருந்து வருகிறது… அது, பாராட்டாக இருந்தாலும் சரி, குற்றச்சாட்டாக இருந்தாலும் சரி!
திமுக., பின்னணியில் பாஜக., இருக்கிறது என்கின்றனர் அதிமுக.,வினர். அதிமுக., பின்னணியில் பாஜக., இருக்கிறது என்கின்றனர் திமுக.,வினர். நாங்கள் எந்தக் கட்சிக்கும் பின்னால் இருந்து செயல்படவில்லை. அனைவருக்கும் முன்னோடியாக இருந்து வருகின்றோம்… என்று கூறினார் பொன்.ராதாகிருஷ்ணன்.