லட்டுக்கு திட்டம் போட்டு… பூந்திகூட ஆகாம… அல்வா ஆயிடுச்சே! மதுரைக் கூத்து!

அடடே... அப்படியா? புகார் பெட்டி பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
Madurai meenakshi amman sundareswarar1 - 2026

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீபாவளி முதல் தரிசனம் செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் தலா ஒரு லட்டு வீதம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

தீபாவளி தினத்தன்று தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் லட்டு தருவார்கள் என்று எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். ஆனால், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கோவில் இணை ஆணையர் நடராஜன் பின்னொரு நாளில் இருந்து தொடங்குவதாக அறிவித்து நோட்டீஸ் ஒட்டி வைத்துவிட்டுச் சென்று விட்டார்.

லட்டை எதிர்பார்த்து வந்தவர்கள், முழு லட்டாகக் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, கொஞ்சம் கொஞ்சம் பிய்த்து… பூந்தியாகவாவது கொஞ்சம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தனர்.

மதுரை மீனாட்சி பிரசாதமாக, இனி மதுரைக்கு அடையாளமாக லட்டோ பூந்தியோ மாறும் என்று எதிர்பார்ப்புகள் அலைமோதியிருக்க, லட்டு இல்லை என்றானது பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே இருந்தது. லட்டுதான் இல்லை என்றால், பூந்தி கூட இல்லாமல் போனதே என்று கூறினார்கள் பக்தர்கள்.

madurai meenakshi - 2026

லட்டு விநியோகம் நிறுத்தப்பட்டதற்கு காரணம் என்ன என்று விசாரிப்பதில், செய்தியாளர்களிடையே லடாய் ஏற்பட்டது. அப்போது, மலேசியாவை சேர்ந்த தொழிலதிபர் லட்டு வழங்குவதற்கான தொகையை அளிப்பதாக தக்கார் கருமுத்து கண்ணனிடம் தெரிவித்ததை அடுத்தே, அவசர கதியில் ஏதோ ஒன்று புதுமையாகச் செய்யப்போவதாக அவரும் அறிவித்துவிட்டார்.

ஆனால் ஸ்பான்சர் வழங்குவதாகத் தெரிவித்த தொழிலதிபர் சூழ்நிலை சரியில்லாமல் கைவிரித்து விட்டாராம். ஸ்பான்ஸர் கைவிட்ட நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற கோவில் நிர்வாகம் வேறொரு நாளில் தொடங்குவதாக மழுப்பி விட்டது என்கிறார்கள்.

லட்டு எதிர்பார்த்து, அது பூந்தியாகக் கூட ஆகாமல், அல்வா ஆனதில் பக்தர்களுக்கு ஏமாற்றம் தான் என்றாலும், அதையெல்லாம் வெளிக்காட்டாமல், எங்களுக்கு லட்டு வேணாம், ஏற்கனவே இலவசமாக வழங்கிக் கொண்டிருந்த மதுரை மீனாட்சியின் குங்குமப் பொட்டலத்தையாவது வழங்குங்களேன் என்று கோரிக்கை மேல் கோரிக்கையாக வைத்துக் கொண்டிருந்தார்கள்.

இதனிடையே, வேறொரு தகவலும் களத்தில் உலா வந்தது. கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், உள்ளூர் அமைச்சர்கள், அறநிலையத்துறை அமைச்சர் என எவரிடமும் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அறிவித்ததால், அவருக்கு ‘பாட்டு’ கிடைத்ததால், ‘லட்டு’ கொடுக்கப் படாமல் அல்வா கொடுத்ததாக கூறிக் கொண்டிருக்கிறார்கள்!

நடந்ததையும் நடப்பதையும் மதுரை மீனாட்சியே அறிவார்! சொக்கா..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.