cvshanmugam - 2026

வெடித்தது ஜெயலலிதா மரண விவகாரம்! மாநில சட்ட அமைச்சரே பகீர் புகார் கூறியுள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எங்களை யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, தங்களை சசிகலா குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை, தாங்கள் எவரையும் சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதாவைப் பார்க்க உள்ளே நுழையக் கூடவிடவில்லை என்றெல்லாம் புகார்கள் அமைச்சர்களால் சொல்லப் பட்டு வந்தது.

இன்னும் ஒரு படி மேலே போய்… அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அம்மா இட்லி சாப்டதா சொன்னதெல்லாம் பொய், அப்படி சொல்ல வைக்கப் பட்டோம்… அதுக்காக எங்களை மன்னிச்சிருங்கய்யா என்றெல்லாம் வெளிப்படையாகவே பேசினார். அதுவே தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், கிளப்பியுள்ள கேள்விகள் மேலும் சர்ச்சையைக் கிளபியுள்ளது. மருத்துவமனையில் ரூ 1 கோடிக்கும் மேல் உணவு சாப்பிட்டது யார்? என்று கேள்வி எழுப்பிய அவர், ஜெயலலிதாவுக்கு முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் உயிரோடு இருந்திருப்பார் என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை ஏன் செய்யவில்லை? செய்யவேண்டாம் என சொன்னது யார்? என்று கேட்டுள்ள சி.வி.சண்முகம், ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பதை தடுத்திருக்கிறார்கள் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதியாகி உள்ளது என்றும், ஜெயலலிதா மரணம் குறித்து அரசு, சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும், ஜெயலலிதா மரணத்தை சந்தேகத்திற்கு இடமான மரணம் என வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க வேண்டும் என்றும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொண்டர்கள் இதைக் கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending