November 27, 2021, 4:17 am
More

  பெரியவா கனவுல கேட்டு, வியப்பில் ஆழ்த்திய சம்பவம்!

  “நாளைக்குக் கார்த்தால, கொஞ்சம் நெறைய சோமாஸ் பண்ணி எடுத்துண்டு வந்து குடேன்!” -பெரியவா
  .
   (கனவுல கேட்டு,வியப்பில் ஆழ்த்திய சம்பவம்)  

  (வேதபாடசாலை மாணவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய கனவில் கேட்டு பண்ணிய திருவிளையாடல்)

  தட்டச்சு-வரகூரான் நாராயணன்
  நன்றி- குமுதம்.லைஃப்
  தொகுப்பு-என். அக்‌ஷிதா

  .மகாபெரியவா சன்யாசம் ஏத்துண்ட காலத்துல இருந்து,முக்தி அடையற காலம் வரைக்கும் நாவுக்கு அரசராகத்தான் இருந்தார்.

  அதாவது உணவுல தனிப்பட்ட விருப்பம்னு அவருக்கு எதுவுமே இருந்ததில்லை.ஒரு கட்டத்துல கொஞ்சம் நெல் பொரி மட்டுமே அவரோட ஆகாரமா இருந்தது.

  அப்படிப்பட்ட மகான் தன்னோட பக்தை ஒருத்தரோட கனவுல காட்சி தந்து, “சோமாஸ் செஞ்சு எடுத்துண்டு வா!” அப்படின்னு உத்தரவிட்டார்னா,அபூர்வமான சம்பவமா இருக்கும்!

  அதைத்தான் இப்போ பார்க்கப் போறோம்.

  மகாபெரியவாளோட பரமபக்தையான மாமி ஒருத்தர் சென்னையில் இருந்தார். அம்பத்தஞ்சு அறுபது வயசு இருக்கும் அவங்களுக்கு. ஒரு நாள் விடியக்கார்த்தால நேரம். அந்த மாமியோட கனவுல மகா பெரியவா தரிசனம் தந்தார். எப்போதும் ஆசார்யாளையே நினைச்சுண்டு இருக்கிற அந்த மாமிக்கு கனவுல அவரோட தரிசனம் கிடைச்சதும் அப்படியே நெக்குருகிப் போய்ட்டா. உடம்பெல்லாம் அப்படியே சிலிர்த்துப்போச்சு.

  அப்படியே ஆசார்யா முன்னால மண்டியிட்டு நமஸ்காரம் செஞ்சா. வாத்ஸல்யத்தோடு அந்த மாமியைப் பார்த்த மகாபெரியவா, ” நாளைக்குக் கார்த்தால, கொஞ்சம் நெறைய சோமாஸ் பண்ணி எடுத்துண்டு வந்து குடேன்!” அப்படின்னு சொல்லிட்டு,சட்டென்று மறைஞ்சுட்டார்.

  நல்ல சொப்பனம். கண்டா அப்படியே தூங்கிண்டு இருக்கக் கூடாது. உடனே எழுந்திருந்துடணும்னு சாஸ்த்ரம் சொல்றது. அதனால ,சட்டுன்னு எழுந்துண்ட அந்த மாமி, மளமளன்னு குளிச்சு,வழக்கமான பூஜையெல்லாம் செஞ்சுட்டு, சோமாஸ் தயார் பண்ணற வேலையை ஆரம்பிச்சுட்டா.

  சோமாஸ் பண்றச்சே எல்லாம், அந்த மாமியோட மனசுல ஆயிரமாயிரம் கேள்விகள் ஓடித்து. ‘ஆசார்யா ஆசார நியமம் உடையவராச்சே, அவர் எதுக்கு சோமாஸ் கேட்கிறார்!’ பசிக்கு நெல் பொரி போதும்னு நியதி வைச்சுண்டு இருக்கிறவர், ருசிக்கு பட்சணம் வேணும்னு கேட்பாரோ..! ஒருவேளை தனக்குத்தான் ஏதாவது பிரமையா இருக்குமோ? நாமபாட்டுக்கு இதை செஞ்சு எடுத்துண்டு மடத்துக்குப் போய் பெரியவா முன்னிலையில வைச்சு, அவர் இதெல்லாம் என்னங்கற மாதிரி கேட்டுட்டார்னா குத்தமாப் போயிடுமே.. .அதை எப்படிப் போக்கிக்கறது?’ இந்த மாதிரி எழுந்த கேள்வியை எல்லாம் தள்ளிட்டு. ‘ஜய ஜய சங்கர, ஹரஹர சங்கர..!’னு சொல்லிண்டே சோமாஸ் பண்ணி முடிச்சா.

  மொத்தமா ஒரு பெரிய ஓலைப்பெட்டியில போட்டு எடுத்துண்டு ஸ்ரீமடத்துக்குப் போய்ச் சேர்ந்தா.

  அங்கே போய் பரமாசார்யாளை தரிசனம் பண்ண வந்திருந்த பக்தர்கூட்ட வரிசையில நின்னா. அப்பவும் அவ மனசுக்குள்ளே,’இதை அவர்தான் கேட்டிருப்பாரா? நாம கனவுல கண்டதை ஏதோ தப்பான பிரமையா புரிஞ்சுண்டுட்டோமா?’ அப்படிங்கற சிந்தனைகள் ஓட ஆரம்பிச்சது. அந்த சமயத்துல ஆசார்யாளோட அணுக்கத் தொண்டர் ஒருத்தர் அங்கே வந்தார்.

  ” மாமீ…மகாபெரியவா உங்களைக் கூப்பிடறார்!” அப்படின்னு சொன்னார். சோமாஸ் இருந்த ஓலைப் பெட்டியை தூக்கிண்டு வேகவேகமா ஆசார்யா முன்னால போய் நின்னா அந்த மாமி.

  “என்ன சோமாஸ் பண்ணி எடுத்துண்டு வந்துட்டியா? ஒரு அறுபது இருக்குமா?” மகாபெரியவா கேட்ட முதல் வார்த்தையே அந்த மாமியை அப்படியே மலைச்சுப்போய் நிற்கவைச்சுது.

  ஒண்ணு, கனவுல வந்து சோமாஸ் கேட்டது தான்தான் அப்படின்னு நிரூபணம் பண்ணற மாதிரி, “சோமாஸ் எடுத்துண்டு வந்துட்டியா?’ன்னு கேட்டது. அடுத்தது, என்னவோ பக்கத்துல இருந்து எண்ணிப் பார்த்தவர் மாதிரி கரெக்டா ‘அறுபது இருக்கா’ன்னு கேட்டது! அப்படியே சிலிர்த்து போய் நின்ன மாமிகிட்டே அடுத்த வார்த்தையைச் சொன்னார் ஆசார்யா.

  “என்னடா இது! சன்யாசிக்கு எதுக்கு பட்சண ஆசை? சோமாஸ் எடுத்துண்டு வரச் சொல்றாரேன்னு நினைச்சியா? இதெல்லாம் வேதபாடசாலைல படிக்கறாளே அவாளுக்குத் தர்றதுக்காகத்தான் கேட்டேன்.இன்னும் கொஞ்ச நேரத்துல அவாளே இங்கே வருவா. நீயே உன் கையால் குடுத்துடு..!”

  அவர் சொன்ன மாதிரியே கொஞ்சநேரத்துல மகாபெரியவாளை தரிசனம் பண்ண வந்தா வேதபாடசாலையில படிக்கிற மாணவர்கள் .அப்போதான் பெரிய அதிசயமே நடந்தது.

  ஆசார்யா சொன்னபடியே எல்லாரும் வரிசையில வர, ஒவ்வொருத்தருக்கும் ரெண்டு,ரெண்டு சோமாஸைக் குடுத்தா அந்த மாமி. ரொம்ப சரியா முப்பது பேர் வந்திருந்தா .ஒரு சோமாஸ்கூட குறையாமலும், கூடாமலும் கரெக்டா அறுபது கணக்கா பத்தித்து.

  ஆசார்யாளோட ஞான திருஷ்டியை உணர்ந்து, அங்கே இருந்த எல்லாரும் அப்படியே சிலிர்த்துப் போய் ஜயஜய சங்கர, ஹரஹர சங்கர’ன்னு சொல்ல ஆரம்பிச்சா.

  ஆசார்யா பட்சணங்களோட எண்ணிக்கை சரியா அறுபது இருக்குன்னு சொன்னதும் ,கனவுல சோமாஸ் கேட்டது தான்தான்னு நிரூபணம் செஞ்சதும் மட்டும்தான் அவாளுக்கெல்லாம் தெரியும். ஆனா,குறிப்பா சோமாஸ்தான் வேணும்னு ஏன் கேட்டாங்கறது, யாருக்குமே தெரியாது.

  அந்த ரகசியம் என்னன்னா, வேதபாடசாலை மாணவர்கள் சிலர், தங்களோட பாடசாலைக்குப் பக்கத்துல ஒரு பட்சணக் கடையில சோமாஸ் விற்கறதைப் பார்த்திருக்கா. பாடசாலை விதிப்படி அந்த மாதிரி விற்கறதை எல்லாம் வாங்கி சாப்பிட முடியாது. இருந்தாலும் அவாளுக்கு சோமாஸ் சாப்டணும்கற ஆசை வந்திருக்கு. அதை தன்னோட ஞானதிருஷ்டியில தெரிஞ்சுண்டுதான், அவாளோட ஆசை பூர்த்தியாகறதுக்காக இப்படி ஒரு திருவிளையாடலைப் பண்ணியிருந்தார் மகாபெரியவா.  

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,110FansLike
  369FollowersFollow
  45FollowersFollow
  74FollowersFollow
  1,736FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-