“உங்க கும்பகோணம் வேத பாஷ்ய கல்லூரியை ஏற்படுத்தியது யார்? வேதபாஷ்யம் படிக்கும் மாணவர்களிடம்-பெரியவா”

“உங்க கும்பகோணம் வேத பாஷ்ய கல்லூரியை ஏற்படுத்தியது யார்? வேதபாஷ்யம் படிக்கும் மாணவர்களிடம்-பெரியவா”

(இஸ்லாமியரான நீதிபதி கமாலுதீன் என்று பெரியவாளே விளக்கம்)

( 16-11-2018 சாய் டிவி.யில் இது பற்றி அற்புத விளக்கம் கொடுத்தார் திரு கணேச சர்மா)

சொன்னவர்-கும்பகோணம் லட்சுமிகாந்த சர்மா

“மதங்களைக் கடந்தருளும் மாமுனிவர்!”

ஈரேழு புவன சக்ரவர்த்தியான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா தான் ஈஸ்வரர் என்கிற ரகசியத்தை மிகவும் சிரமப்பட்டு மறைத்து,  இப்பூவுலகில் பிரம்ம மகரிஷியாம் சுகப்பிரம்மரிஷி அவர்களின் தவமேன்மையோடு நம்மிடையே எளிய திருஉருக் கொண்டு அருளுகின்றார்.

மதங்கள் என்ற பேதம் ஏதுமின்றி அவர்தம் அருள் பரவியருள்கிறது. கும்பகோணம் லட்சுமிகாந்த சர்மா எனும் ஸ்ரீ பெரியவா பக்தர் இப்படியொரு அனுபவத்தைக் கூறுகிறார்.

1961 ஆம் வருட பிற்பகுதியில் கும்பகோணம் சப்ஜட்ஜ் ஆக இருந்த ஒரு இஸ்லாமியர் திரு. லட்சுமிகாந்த சர்மாவைக் கூப்பிட்டனுப்பினார். முன்பின் அறியாதவராய் இவர் சப்ஜட்ஜ் எதற்காகக் கூப்பிடுகிறார் என்ற ஆச்சர்யமும், ஆவலுமாக அவரிடம் சென்றபோது கும்பகோணத்தில் இயங்கிய சில தர்மஸ்தாபனங்கள் சீர்திருத்தும் பணிக்காக இவரை நியமனம் செய்வதாக ஜட்ஜ் சொன்னார். இவருக்குப் பொது காரியங்களில் சிரத்தையில்லாததால் அதை மறுத்துவிட்டார்.

ஜட்ஜ் இவரிடம் இதில் பங்கேற்குமாறு வாஞ்சையுடனும் , கண்டிப்புடனும் கேட்டுக் கொண்டார். யோசித்துச் சொல்வதாகக் கூறிவிட்டு வந்தவர் அப்போது இளையாத்தங்குடியில் முகாமிட்டிருந்த ஸ்ரீ பெரியவாளிடம் சென்று இது விஷயமாக உத்தரவிட்டருளுமாறு வேண்டினார். ஸ்ரீ பெரியவா ஏற்றுக் கொள்ளும்படி சொல்லவே மனநிறைவோடு அப்பணியை ஏற்றார்.

கோவிந்தகுடி அப்பாக்குட்டி ஐயர் சாரீடிஸ் மற்றும் கல்யாணராமய்யர் சாரீடிஸ் என்ற ஸ்தாபனங்களின் அபிவிருத்திக்காக முழுமூச்சாக உழைத்த இவர் , வேதபாடசாலை சிறப்பாக இயங்கவும் முயற்சியினை மேற்கொண்டார்.

இப்படி இருந்த சமயம் ஒரு முறை ஸ்ரீ பெரியவாளை இவர் தரிசிக்கச் சென்ற போது “நீ வேதபாஷ்ய காலேஜ் ஆரம்பிக்கிறாயா? உன்னால் முடியுமா?”  என்று கேட்க இவர் “பெரியவா ஆக்ஞாபித்தால் எப்பாடுபட்டாவது ஆரம்பித்துவிடுகிறேன்” என்றார்.ஸ்ரீ பெரியவா முக்காலமும் உணர்ந்தவர் என்பது பின் நீதிபதி இவரைப் பார்த்தபோது “உங்கள் வேதத்தின் பொருளை வேதபாடசாலையில் பயில்பவர்கள் தெரிந்து உணர்ந்து கொண்டு படிக்கும்படி செய்ய என்ன வழி உள்ளது? எங்கள் குரானை அர்த்தமுடன் பயில்விக்க பல இடங்களில் கல்லூரிகள் உள்ளன. மாயவரம் சமீபம் நிடூர் கிராமத்தில் ஒரு அரபிக் கல்லூரி உள்ளது” என்று சொன்னதோடு விட்டு விடாமல்  அந்தக் கல்லூரிக்கு லட்சுமிகாந்த சர்மாவையும் விடாமல் அந்த கல்லூரிக்கு லட்சுமிகாந்த சர்மாவையும் அழைத்துப்போய் காட்டினார்.

“நீங்களும் உங்கள் வேதகங்களை இதுபோலவே அர்த்தத்தோடு சொல்லிக் கொடுத்து அபிவிருத்தி செய்யலாமே அதற்காக கல்லூரிகளை ஏற்படுத்த முயற்சிக்கலாமே” என்றார்.
ஸ்ரீ பெரியவா தன்னிடம் கேட்டுக்கொண்டது போலவே ஜட்ஜ் அவர்களும் கேட்டதில் இவருக்கு பெரிய ஆச்சர்யமாக இருந்தது. அதன்பின் திரும்பவும் ஸ்ரீபெரியவாளிடம் சென்று நீதிபதி கூறியதை சொல்லி “அப்படி வேதபாஷ்ய கல்லூரி ஆரம்பிப்பதென்றால் அதற்கு ஸ்ரீ பெரியவா வந்து துவக்கி வைக்க வேண்டும்” என்றார்.

ஸ்ரீ பெரியவாளும் “வருகிறேன்” என்றார். மேலும் “நான் சொல்வதை சனாதனிகளோ,  ஹிந்துக்களோ கேட்க மாட்டார்கள். ஆனால் நான் சொல்லாமலேயே உங்கள் ஜட்ஜ் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்” என்று ஹாஸ்யமாகக் கூறினார்.

பின் ஒரு முறை ஜட்ஜ் இவரிடம் “நான் பெரியவாளைத் தரிசிக்க வரலாமா?” என்று கேட்டார். இவரும் ஸ்ரீபெரியவாளிடம் அனுமதி பெற்றுத் தரிசிக்க அழைத்துச் சென்றார். அந்த பிற்பகல் நேரத்தில் பிரளயம் போல் மழை கொட்டிக் கொண்டிருந்தது. இவர் மட்டும் முதலில் போய் ஸ்ரீ பெரியவாளிடம் ஜட்ஜ் வந்திருப்பதைக் கூற சென்றபோது, ஸ்ரீ பெரியவாளே எழுந்து வந்து ஜட்ஜ் எங்கிருக்கிறார் என்று சைகையில் கேட்டுவிட்டு  “அவரை அழைத்துவந்து பக்கத்து வீட்டில் இருக்கச் செய்” என்றார்.

இப்படிச் சொல்லி ஜட்ஜை இவர் கூப்பிடுவதற்குள் ஸ்ரீ பெரியவாளே அந்தக் கொட்டும் மழையில் நனைந்துக்கொண்டு சேறும், சகதியுமாக இருந்த இடத்தில் வேகமாக நடந்து தானாகவே வந்துவிட்டார்.

நீதிபதி ஸ்ரீபெரியவாள் முன் கையைக் கூப்பிக்கொண்டு நின்று கொண்டிருந்தார். ஸ்ரீ பெரியவா அவரை ஏதோ வெகு காலமாக தெரிந்தவர்போல அவர் குடும்பத்தைப் பற்றியும்,  சுற்றார்,  உறவுகள் பற்றியும் அவர்கள் அனைவரின் பெயரையும் குறிப்பிட்டபடி விசாரித்து உரையாடியபோது சர்வேஸ்வரரான ஸ்ரீ பெரியவாளுக்கு மட்டுமே இப்பேற்பட்ட அதிசய செயல் சாத்யம் என்பதாக இவருக்குத் தோன்றியது.தான் தரிசித்துக் கொண்டிருப்பது தன் அல்லாவைப் போல் சர்வ வல்லமை படைத்த ஒரு கடவுள் என்பதை அந்த அயல் மதத்தினரான நீதிபதி உணர்ந்ததால் அவர் கண்களில் நீர் மண்டியது.பின் நீதிபதிக்கு பழங்களையும், ஒரு பட்டு மேலாடையையும் பிரசாதமாகக் கொடுத்து “நல்ல காரியங்களை செஞ்சிண்டு க்ஷேமமாய் இரு” என்று ஆசிர்வதித்தார் ஸ்ரீ பெரியவா.
பிறகு ஊர் திரும்பியதும் நீதிபதியின் முயற்சியால் கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் வேதபாஷ்ய கல்லூரி துவங்கி தேதி நிர்ணயிக்கப்பட்டுப் பத்திரிக்கையும் போட்டு எடுத்துக்கொண்டு ஸ்ரீ பெரியவாளிடம் மறுபடியும் தரிசனம் செய்ய இவர் சென்றார்.

1963 ஆம் வருடம் டிசம்பர் மாதம் டவுன் ஹைஸ்கூலில் விழா ஆரம்பித்தது. 5000 பேர் கூடியிருந்தனர். ஸ்ரீ பெரியவா வருகைத் தருவதாக இருந்தால் கூட்டத்திற்குக் கேட்பானேன்?ஸ்ரீ பெரியவா வந்து அமர்ந்து விழாவைத் துவங்கும்படி சைகை காண்பித்ததும், இவர் சமஸ்கிருதத்திதில் வரவேற்புரை வாசித்து ஸ்ரீ பெரியவாளின் பாதகமலங்களில் அர்ப்பணம் செய்தார்.
ஸ்ரீ பெரியவா இவரைக் கூப்பிட்டு அந்த சப்ஜட்ஜ் எந்த ஜாதியை சேர்ந்தவர் என்பதை கூட்டத்தினருக்குத் தெரிவித்து அறிமுகப்படுத்திச் சொன்னார். இவரும் சப்ஜட்ஜைப் பற்றி இரண்டொரு வார்த்தைகளை கூறியவுடன் “அதெல்லாம் வேண்டாம் அவர் ஜாதி என்ன என்று கூறு” என்று ஆக்ஞையிட்டார். அதற்கு இவர் தயங்கவே, ஸ்ரீ பெரியவாளே கூட்டத்தினருக்கு சப்ஜட்ஜை அறிமுகம் செய்து வைத்து விழாவைத் துவக்கிவைத்தார்.

அப்போது சுமார் ஐம்பது வருடத்திற்கு முன்பு சேலம் பகுதியில் ஸ்ரீ பெரியவா யாத்திரை மேற்கொண்டிருந்தபோது, ஸ்ரீ பெரியவாளுக்கு ஏற்பட்ட ஒரு சம்பவத்தை அவரே திருவாய் மலர்ந்தருளினார்.

ஸ்ரீ பெரியவா யாத்திரைப் புரியும் போது பரிவாரங்கள் சாலை வழியாகப் போகும் போது குதிரையின் மேல் நகரா அடித்துப் போவது வழக்கமாம். இதுபோல், ஒரு மசூதி வழியாக போகும்போது மசூதி வாசலில் இப்படி நகரா அடிக்கக்கூடாதென்று குதிரையின் முனைக்கயிற்றைப் பிடித்துத் தடுத்தார்களாம். அதில் சிறு சலசலப்பு ஏற்பட்டு சிலர் மத்யஸ்தம் செய்தார்கள்.

மறுதினம் மசூதிக் குழுவை சேர்ந்த ஒருவர் மடத்து அதிகாரியிடம் ஸ்ரீ பெரியவாளைத் தனியாக சந்திக்க வேண்டுமென்று கேட்க மடத்து அதிகாரி முதல் நாள் சம்பவத்தை மனதில் கொண்டு அது சாத்தியமில்லை என்றும், எல்லோரும் இருக்கும்போது தான் சந்திக்கலாம் என்றும் கூறிவிட்டு இவ்விஷயத்தை ஸ்ரீ பெரியவாளிடம் தெரிவித்தார்களாம்.ஆனால் ஸ்ரீ பெரியவா மறுதினம் அவரை வரச் சொல்லுமாறும், எதிர்ப்புறத்தில் ஒரு வீட்டில் அவரை சந்திப்பதாகவும், உடன் ஒருவரும் இருக்கக்கூடாதென்றும் கூறிவிட்டாராம்.வேறு வழியின்றி ஸ்ரீமடம் அதிகாரிகளும் அதன்படியே ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியதாகிவிட்டதாம்.
மறுதினம் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் அவரை சந்திக்கும்போது ஸ்ரீ பெரியவா வாசல் கதவைக்கூட உள்புறம் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டுவிட்டாராம்.
மடத்து அதிகாரிகளும் கலக்கத்துடன் வெளியே காத்திருந்தார்களாம். வந்த இஸ்லாமிய அன்பர் தன் பையிலிருந்த நீண்ட ஒரு காகித உறையை எடுத்தாராம். அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ பெரியவா ‘என்ன?’ என்று கேட்க, அதில் ஸ்ரீ பெரியவாளைப் பற்றி எழுதியிருந்த சமஸ்கிருத ஸ்லோகங்கள் இருந்தனவாம்
சக்கரபந்தம், நாகபந்தம், கருடபந்தம் போன்ற பல சாகித்ய மரபுகளுடன் மிகவும் அழகாக எழுதப்பட்டிருந்த ஸ்லோகங்களை அந்த இஸ்லாமியர் ஸ்ரீ பெரியவாளிடம் வாசித்துக் காண்பித்தாராம்.

இதைக் கேட்ட பெரியவா “இதை யார் எழுதியது? யார் சொல்லிக் கொடுத்தார்கள்? என்ன தொழில் செய்கிறீர்கள்” என்று கேட்டதற்கு, அவர் ஸ்லோகங்களைத் தானே எழுதியதாகவும், தன் தந்தை முதலான தன் பரம்பரையினர் சமஸ்கிருதத்தில் விசேஷப் பயிற்சி பெற்றவர்கள் என்றும் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டதாகவும் கூறினார். அவர்கள் பல தலைமுறையாக கசாப்புக்கடை வைத்திருப்பதாகவும் கூறினாராம்.இந்தக் கதையை ஸ்ரீ பெரியவா ஹாஸ்யமாகவும் , சஸ்பென்ஸ் த்ரில்லிங்காகவும் எல்லோரும் பிரமிக்கும்படிக் கூறிவிட்டு முடிவில் நல்லொழுக்கம் பண்புள்ளவர்களுக்கு ஜாதி என்பது குறியீடாக அமைவதில்லை. எந்த ஜாதியிலும் இப்படிப்பட்ட பெருந்தகையோர் இருக்கலாம் என குறிப்பிட்டுவிட்டு அந்த சப்ஜட்ஜின் முயற்சியைப் பாராட்டி உரையாற்றினாராம்.

இது நடந்து பல வருடங்களுக்குப் பின் ஸ்ரீ பெரியவா ஆந்திர பிரதேச யாத்திரையின் போது கும்பகோணம் கல்லூரியில் வேதபாஷ்யம் படிக்கும் மாணவர்களும் அங்கு போயிருந்தார்கள். அவர்களிடம் ஸ்ரீ பெரியவா “உங்க வேத பாஷ்ய கல்லூரியை ஏற்படுத்தியது யார்?” என்று கேட்டுவிட்டுப் பின் ஸ்ரீ பெரியவாளே அந்த சப்ஜட்ஜின் பெயரைக் கூறிவிட்டு “அவர் க்ஷேமமாக இருக்க வேண்டும்” என்று சங்கல்பம் செய்துக் கொண்டே ஸ்நானம் செய்தாராம்.

இப்படி வேத பிரசாரத்துக்கும் பெரும்பணியாற்றிய அந்த இஸ்லாமியரான நீதிபதி கமாலுதீன் அவர்களை ஒருமுறை ஸ்ரீ பெரியவா ‘அவர் ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றவர்’ என்று சிலாகித்து திரு.லட்சுமிகாந்த சர்மாவிடம் பேசியதாக இவர் சம்பவத்தை முடிக்கிறார்.இதுபோல் ஜாதி மத பேதங்களை மீறி உலகோருக்கெல்லாம் பெரும் தெய்வமாய் விளங்கும் ஸ்ரீ பெரியவாளெனும் ஈஸ்வரரை நாம் சரணடைந்து சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று, சர்வ மங்களங்களையும் அடைவோமாக

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Latest Posts

spot_imgspot_img

Follow Dhinasari on Social Media

19,159FansLike
373FollowersFollow
64FollowersFollow
0FollowersFollow
2,495FollowersFollow
17,300SubscribersSubscribe
-Advertisement-