“சிவ..கடாக்ஷம்னு சொல்லு…நான் என்ன பண்ணினேன்”-
வேலை இழந்த சிவாச்சாரியாருக்கு மறு வாழ்வு கொடுத்த பெரியவாளிடம்-“பெரியவா கடாக்ஷம்..சௌக்கியமா..ரொம்ப சௌக்கியமா இருக்கேன்” என்ற பதிலுக்கு பெரியவா சொன்னது மேலே
(தன்னை ஒளித்துக் கொள்வதில் பெரியவாள் மகா சமர்த்தர்கள்)
தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மா
உள்ளம் கவர் கள்வன் என்ற தலைப்பில்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நடுவயதினரான ஒரு சிவாச்சாரியார், ‘வரும்படி நிறையக் கிடைக்குமே’ என்று தன் கிராமத்தை விட்டு, நகரத்தை ஒட்டிப் புதிதாக முளைத்திருந்த ஒரு கோயிலில் பணி ஏற்றுக் கொண்டார். “போக வேண்டாம்” என்று தகப்பனார் சொன்னதையும் கேட்கவில்லை..
புதிய கோயிலில் நல்ல வருமானம் வந்தது. தன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்ட சிவாச்சாரியார் தன் அகங்கார தரத்தையும் உயர்த்திக் கொண்டார்.
விளைவு?
கோயில் சாவியை அவரிடமிருந்து வாங்கி, வேறொரு சிவாச்சாரியாரிடம் கொடுத்துவிட்டார், அடிதடி வழக்குகளுக்குப் பேர் போன தர்மகர்த்தா!
வேலை நீக்கப்பட்ட சிவாச்சாரியார், பெரியவாளிடம் வந்தபோது அவர் முகத்தில் சோகம் குடிகொண்டிருந்தது.
“என்ன சிரமம் உனக்கு?” என்று பெரியவாள் கேட்டார்கள்.
“வேலை போயிடுத்து…..சாப்பாட்டுக்கே கஷ்டம்…”
“உன் அப்பா என்ன பண்றார்!”
“அவர் கிராமத்திலேயே இருக்கார். சிவன் கோயில் பூஜை…”
“உன் கிராமத்திலே என்ன விசேஷம்?…”சிவாச்சாரியார் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தார்.
“…அது நாயன்மார்களால் பாடல் பெற்ற ஸ்தலம். ரொம்பப் பழமையானது. ஆகம சாஸ்திரப்படி கட்டப்பட்டது. ஈசான்யத்தில் ஒரு பெரிய மரம் இருக்குமே…இன்னும் இருக்கோ…”
“இ….ரு…க்…கு..” என்று மெல்ல இழுத்தார் சிவாச்சாரியார். கவனம் வரவில்லை
“உங்க ஊர் பரமேசுவரனுக்கு உன்கிட்ட ரொம்பப் ப்ரீதி….அங்கே இங்கே போய் சின்னச் சின்ன கோயில்களிலே கஷ்டப்படவேண்டாமேன்னு நினைக்கிறார். நீ கிரமாத்துக்குப் போய் உன் அப்பாவுக்கு ஒத்தாசையா இரு…”
பெரியவாள் உத்தரவுப்படியே அவர் கிராமத்துக்குப் போய் சிவன் கோயில் பணியில் ஈடுபட்டார்.
ஆச்சரியம்!
அடுத்த மாதமே அந்தக் கோயில் திருப்பணிக்கு கமிட்டி போட்டுவிட்டார்கள் கிராமத்தார்.
“பாடல் பெற்ற ஸ்தலம்” என்று எக்ஸ்ட்ரா சிறப்பு-சிவனடியார்கள் கூட்டம்.
இரண்டு வருடம் கழித்து பெரியவாள் தரிசனத்துக்கு வந்து, நெடுஞ்சாண்கிடையா விழுந்தார் சிவாச்சாரியார்.
“எந்தக் கோயில் பூஜைன்னு கேளு” என்று எதுவுமே அறியாத அப்பாவியாக, சிஷ்யரிடம் கூறி விசாரிக்கச் சொன்னார்கள் பெரியவா…
அப்போதுதான் சிவாசாரியார் பழைய சரித்ரத்தைச் சொன்னார்.
“இப்போ எப்படி இருக்கே”
சிவாசாரியார் கண்களில் நீர் தளும்பித்து.
“பெரியவா கடாக்ஷம்.!…சௌக்கியமா…ரொம்ப சௌக்கியமா இருக்கேன்.
“சிவகடாக்ஷம்னு சொல்லு….நான் என்ன பண்ணினேன்.
தன்னை ஒளித்துக் கொள்வதில்,பெரியவாள் மகா சமர்த்தர்கள்.