“பூனை தோஷம் இருக்கும்னு தெரிஞ்சுண்டு அந்த விதியை மாத்தி, விதி மீறல் பண்ணாம,

“பூனை தோஷம் இருக்கும்னு தெரிஞ்சுண்டு அந்த விதியை மாத்தி, விதி மீறல் பண்ணாம, அவாளோட பாவம் தீர்றதுக்கான வழியை மட்டும் ஏற்படுத்திக் கொடுத்த மகா பெரியவா”

(குழந்தை மேல பால் வாசனை இருந்தா, பூனை வந்து நக்கும்.,சாபம் விலகும்னு முன்கூட்டியே தீர்மானிச்சு, புஷ்பத்தால குழந்தையோட தேகம் முழுக்க பாலைத் தடவினாரே,அது எவ்வளவு பெரிய தீர்க்க தரிசனம்.)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் பக்தி
(சுருக்கமான ஒரு பகுதி)

ஒருசமயம் ஸ்ரீமடத்துல மகாபெரியவா பக்தர்களுக்கு தரிசனம் குடுத்துண்டு இருந்தார். அப்போ அவரை தரிசிக்க, கையில சின்னக் குழந்தையோட வந்திருந்தா ஒரு தம்பதி.

அவா வந்து வரிசையில நின்னதுல இருந்து பலரும் அந்தக் குழந்தையைத்தான் பார்த்துண்டு இருந்தா. ரொம்பவே அழகா மூக்கும் முழியுமா இருந்த அந்தக் குழந்தைகிட்டே இருந்து சின்ன சிணுங்கலோ ,அழுகையோ அசைவோ ஒண்ணுமே ஏற்படலை. ஒருவேளை தூங்கிண்டு இருக்கலாம்னு நினைச்சவாளுக்கு குழந்தையோட கண்கள் திறந்த நிலையில இருக்கறதைப் பார்த்ததும் ஒண்ணும் புரியலை.

ஆனா,குழந்தை சம்பந்தமான ஏதோ சங்கடத்தோடதான் அவா வந்திருக்காங்கறது மட்டும் எல்லாருக்கும் புரிஞ்சுது.

குழந்தையோட பரமாசார்யா முன்னால வந்து நின்ன அந்தத் தம்பதி தங்களோட குழந்தையை அவர் திருவடிக்கு முன்னால அப்படியே தரையில விட்டா.

குழந்தை அழாமலும் சிணுங்காமலும் கிடக்க, பெத்தவா ரெண்டு பேரும் கதறி அழ ஆரம்பிச்சா.

“பெரியவா..குழந்தை பொறந்ததுலேர்ந்து எந்த அசைவுமே இல்லை. இதுக்கு பார்வை தெரியுமா, காது கேட்குமாங்கறதெல்லாம் கூட எங்களுக்குத் தெரியலை. எந்த உணர்ச்சியுமே இல்லாம ஜடம் மாதிரி இருக்கு.நீங்கதான்…!” முழுசா முடிக்க முடியாம கேவிக்கேவி அழத்தொடங்கிட்டா ரெண்டு பேரும்.

பதில் ஏதும் சொல்லாம கொஞ்ச நேரம் அந்தக் குழந்தையையே பார்த்துண்டு இருந்த மகாபெரியவா, “சுவாமிக்கு பூஜை பண்ணின புஷ்பத்தில் இருந்து ஒரு நந்தியாவட்டையும், கொஞ்சம் பசும்பாலும் எடுத்துண்டு வா!” தன் பக்கத்துல நின்னுண்டிருந்த சீடன்கிட்டே சொன்னார்.

என்ன, எதுக்குன்னெல்லாம் கேட்காம போய் எடுத்துண்டு வந்தார் அந்த சீடன்.

கிண்ணத்துல எடுத்துண்டு வந்த பாலை, நந்தியாவட்டை புஷ்பத்தால தொட்டுத் தொட்டு அந்தக் குழந்தையோட உடம்பு முழுக்க தடவினார் மகாபெரியவா.

இதோ இப்ப ஏதோ அதிசயம் நடக்கப்போறதுன்னு எல்லாரும் காத்துண்டு இருக்க, “கொழந்தையை அப்படியே தூக்கிண்டு போய் மாயவரத்துல இருக்கிற கோயில்ல தக்ஷிணாமூர்த்தி சன்னதியில படுக்கப் போடுங்கோ. உடனே பொறப்படுங்கோ!” மகபெரியவா சொல்ல, கொஞ்சமும் தாமதிக்காம உடனே புறப்பட்டா அந்தத் தம்பதிகள்.

மகாபெரியவா சொன்னபடியே மாயூரநாதர் கோயிலுக்குப் போய் எல்லா சுவாமியையும் தரிசனம் பண்ணிட்டு, அப்படியே பிரகாரத்துல வந்து தக்ஷிணாமூர்த்தி முன்னால ஒரு துண்டை விரிச்சு, அந்தக் குழந்தையைக் கிடத்தினா.

இதுக்குள்ளே மகபெரியவா சொன்னதாலதான் அவா அங்கே வந்து அப்படி ஒரு சங்கல்பத்தை செஞ்சுண்டு இருக்கா, அப்படின்னு தெரிஞ்சு நிறைய பக்தர்கள் அங்கே கூடிட்டா.

ஆசார்யாளே சொல்லி அனுப்பியிருக்கார்னா ஏதாவது ஒரு அதிசயம் நடக்கும்கற எதிர்பார்ப்பு எல்லார் முகத்துலயும் இருந்தது. அதைவிட முக்கியமா அந்தக் குழந்தையோட பெற்றோரிடம், தங்களோட குழந்தைகிட்டே கண்டிப்பா மாற்றம் ஏற்படும்கற நம்பிக்கை இருந்தது

நேரம் கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்துண்டு இருந்தது. மத்தியானம் நடை சாத்தற நேரம் நெருங்கிண்டு இருந்தது.நடை சாத்தறதுன்னா கோயிலை விட்டு வெளியே வந்துடணும். குழந்தையைப் பெத்தவா மனசுல படபடப்பு அதிகரிச்சுண்டே போச்சு.

அந்த சமயத்துல திடீர்னு ஒரு பூனை எங்கே இருந்தோ வந்தது.சன்னதியில கிடந்த குழந்தைகிட்டே நெருங்கித்து குழந்தையை பூனை பிராண்டிடுமோன்னு பயந்து விரட்ட நினைச்சவா கூட ஏதோ மந்திரத்தால கட்டுப்பட்டவா மாதிரி பூனைக்கு எந்தத் தொந்தரவும் செய்யாம வேடிக்கை மட்டும் பார்த்துண்டு இருந்தா.

யாரும் எதிர்பாராத நேரத்துல பூனை சட்டுன்னு குழந்தையை நெருங்கி, அதோட தேகத்தை நாக்கால நக்கிட்டு, ஒரே ஓட்டமா வெளியில தாண்டி ஓடித்து.

அந்த நிமிஷம் அங்கே அதிசயம் நடந்தது. பொறந்ததுல இருந்து அசைவே இல்லாம ஜடம் மாதிரி இருந்த குழந்தை மெதுவா கையைக் காலை உதைச்சுண்டு புரண்டு படுக்க முயற்சி பண்ணித்து.

தன்னையே நம்ப முடியாத பரவசத்தோட குழந்தையை நெருங்கினா, அதோட அம்மா. தாயாரைப் பார்த்து பொக்கை வாயைத் திறந்து சிரிச்சுது. ம்…ழேன்னெல்லாம் மழலையில் கொஞ்சித்து. சரியா அதே நேரத்துல உச்சிகால பூஜைக்கான மணி ஓசை எழுந்து கோயில் முழுக்க எதிரொலிச்சுது

“ஏதோ காரணத்தால, முற்பிறவியில பூனையைக் கொன்னிருந்தாலோ,இல்லை குடும்பத்துல யாராவது அதைச் செஞ்சிருந்தாலோ அவாளோட வம்சம் இப்படித்தான் முடங்கிப் போகும்.’மார்ஜால சாபம்’.னு இதைச் சொல்லுவா. (மார்ஜாலம்னா பூனைன்னு அர்த்தம்) அப்படி ஒரு சாபம் இவாளுக்கு இருந்திருக்குபோல இருக்கு.அதை நிவர்த்தி ஆகறதுக்குதான் மகாபெரியவா இவாளை இங்கே அனுப்பியிருக்கார்!” கூட்டத்துல யாரோ சொல்லிண்டு இருந்தா.

அவாளுக்கு பூனை தோஷம் இருக்கும்னு தெரிஞ்சுண்டு அந்த விதியை மாத்தி, விதி மீறல் பண்ணாம, அவாளோட பாவம் தீர்றதுக்கான வழியை மட்டும் ஏற்படுத்திக் குடுத்து மாயவரத்துக்கு மகாபெரியவா ஒரு ஆச்சரியம்னா, குழந்தை மேல பால் வாசனை இருந்தா, பூனை வந்து நக்கும்.,சாபம் விலகும்னு முன்கூட்டியே தீர்மானிச்சு, புஷ்பத்தால குழந்தையோட தேகம் முழுக்க பாலைத் தடவினாரே,அது எவ்வளவு பெரிய தீர்க்க தரிசனம்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...