ஒவ்வொரு ஆண்டும் முந்தைய நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஒருசில முக்கிய காரணங்களுக்காக கணக்கு தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31-ம் தேதி முடிவடைந்த நிலையில், அது மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டது.
அதாவது வரி கணக்கை தாக்கல் செய்வதில் உள்ள பல்வேறு சிக்கல்கள் குறித்து வரி செலுத்துவோர் முன்வைத்த கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 31-ம்தேதி வரை காலக்கெடுவை நீட்டித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது. இதனால் வரி செலுத்துவோர் பதற்றம் இன்றி தங்கள் கணக்கை தாக்கல் செய்தனர்.
இந்த கூடுதல் அவசாசம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஒரு மாத காலம், அதாவது செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.
இதனையடுத்து வருமான வரித்துறை டுவிட்டர் மூலம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல் போலியானது. எனவே, வரிசெலுத்துவோர் ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவான இன்றைக்குள் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.