மறைந்த திமுக., தலைவர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு மெரினாவில் அரசு இடம் தராமல் இருந்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கி இருப்பேன்… என்று ரஜினி கூறியிருந்தார். கருணாநிதிக்காக சினிமா உலகத்தினர் நடத்திய நினைவஞ்சலிக் கூட்டத்தில் ரஜினி கூறிய கருத்துகள் இப்போது விவாதப்பொருளாய் ஆகியிருக்கிறது.
எதுக்கெடுத்தாலும் போராட்டம் பண்ணா தமிழ்நாடு சுடுகாடு ஆயிடும்னு யாரு சார் சொன்னது ? உங்களைத்தான் கேக்கறேன் @rajinikanth
எதுக்கெடுத்தாலும் போராட்டம்ன்னா நாடே சுடுகாடாயிடும் -தூத்துக்குடி ரஜினி
மெரீனாவை சுடுகாடா கொடுக்காட்டி நானே இறங்கி போராடுவேன்- சென்னை ரஜினி
இதுதான் ரஜினியின் #ஆன்மீகஅரசியல் போலிருக்கிறது.
ரஜினி.. உன் நல்ல நேரம் ஜெயலலிதா உயிருடன் இல்லை.
– இப்படி ரஜினியின் பேச்சைக் கேட்டுவிட்டு பலர் தங்கள் உள்ளக் குமுறலைக் கொட்டுகின்றனர்.
கருணாநிதி திரை உலகில் இரண்டு நபர்களை பெரிய நடிகராகக் கொண்டு வந்தாராம்! சொல்லப் போனால், அவர்கள் இவருடைய எழுத்தை பட்டி தொட்டிக்கு எல்லாம் எடுத்துச் செல்லவில்லை என்றால் கருணாநிதி என்ற நபர் என்றோ காணாமல் போயிருப்பார்.
அடுத்து, கருணாநிதியின் இறுதிச் சடங்கில் முதல்வர் எடப்பாடி கலந்து கொள்ள வில்லை என்று மாபெரும் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் ரஜினி!
ஜெயலலிதா இருந்த போது வசைபாடிவிட்டு, இன்று இருப்பவர்கள் என்ன ஜெயலலிதாவா அல்லது புரட்சித் தலைவரா என்று கேட்கிறார்! அப்படியானால் மறைந்து போனவர்கள் பெரிய மனிதர்கள்; அவர்கள் செய்யலாம்! நீங்கள் செய்ய வேண்டாம் என்கிறாரா!
அரசும் முதல் அமைச்சரும் ஒரு முன்னாள் முதல்வருக்கு செய்ய வேண்டிய மரியாதைகளை விட அதிகமாகவே, அதுவும் நல்ல முறையில் செய்து விட்டது. அப்படியானால் இப்போது சினிமா துறை நடத்திய, கலைஞரின் நினைவேந்தல் நிகழ்வில் மய்யமும், தல இன்னும் பிற சக கலைஞர்கள் வராததை ஏன் கேட்கவில்லை? அப்போது தெரிய வில்லையா மரியாதை கொடுக்க வேண்டியதை பற்றி?!
ரஜினி தரம் தாழ்ந்து போய் விட்டார் – என்றே இப்போது நினைக்கத் தோன்றுகிறது! இருபது வருடம் முன், தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்றார். ஆனால், பின்னாளில் தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று கூறிய அந்த ஜெயலலிதாவிடம் கெஞ்ச வேண்டிய நிலைக்குப் போனார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருணாநிதியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை என்று ஆதங்கப் பட்டிருக்கிறார்.
ஏழு நாள் துக்கம், அரசாங்க விழாக்கள் ஒத்திவைப்பு, தேசிய அளவிலும் துக்கம், கொடி அரைக் கம்பம் பறத்தல்… இவையெல்லாம் ஜெயலலிதாவுக்கே இருந்ததா என்று நினைவில்லை. கருணாநிதி உடல்நிலை மிக மோசம் என்று கூறப்பட்ட அந்நாளில் சேலத்து அரசு நிகழ்ச்சிகளை எல்லாம் ரத்து செய்துவிட்டு, முதல்வர் எடப்பாடி மருத்துவமனைக்கு வந்ததும், பல ஏற்பாட்டில் அரசு ஒத்துழைப்புக் கொடுத்ததும், வந்து இறுதி மரியாதை செலுத்தியதும் ரஜினிக்கு போதாது போலும்!?
ஜெயலலிதா இருந்திருந்தால், மேற்கண்ட எதுவும் நிகழ்ந்திருக்காது என்பது உலகறிந்த பரம ரகசியம்!
மெரீனாவில் புதைக்க கூடாது என்று அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தால், அதை ரஜினி எதிர்த்திருப்பேன் என்கிறார். தமிழ்நாட்டில் பல பிரச்னைகள் இருந்த போது , குறிப்பாக ஜெயலலிதா இருந்தபோது அடங்கி ஒடுங்கி இருந்த இடம் தெரியாமல் இருந்ததை பொதுமக்களாகிய நாம் மறக்கவில்லை.
காவேரி விவகாரம் இழுத்துக் கொண்டிருந்தபோது இந்தக் கூச்சல் போட்டதாகத் தெரியவில்லை.வெள்ளத்தின் போதோ, வர்தா புயலின் போதோ வீதியில் வந்து சேவை செய்யாதவர்களெல்லாம் இப்படிப் பேசுவது விந்தைதான்!
பெரியவர் கருணாநிதி உயிருடன் இருக்கும் வரை அரசியலில் இறங்க மாட்டேன் என்று இருபது வருடம் முன் சபதம் செய்தவர் என்பதால், ரஜினி திமுக கூடாரத்தை குறி வைத்துப் பேசுகிறார் என்றே தோன்றுகிறது.
கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் கருணாநிதி குறித்துப் பேசுவதற்கு ஒரு நல்ல விஷயம் கூட ரஜினிக்குக்க் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. அங்கும் அரசியல் பேச்சை அவிழ்த்து விட்டு…
ரஜினி தரம் தாழ்ந்து போய்விட்டார்! யாருக்கும் வெட்கமில்லை!