சென்னை:
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் போல் மவுனச் சாமி ஆகக் கூடாது என்று அதிமுக., எம்.எல்.ஏ., வெற்றிவேல் விமர்சனம் செய்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அதிமுக., கட்சியானது இரு அணிகளாகப் பிரிந்து தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இது போதாதென்று, சசிகலாவுக்கு ஆதரவாக டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக., எம்.எல்.ஏ.க்கள் சிலர் தனியாக கருத்து தெரிவித்து மூன்றாவது அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
இம்மூன்று அணிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள் என அதிமுக.,வினர், கட்சியினரைக் குழப்பும் விதத்தில், தனித்தனியே வெவ்வேறு விதமான கருத்துக்களை ஊடகங்களில் பேசி வருகின்றனர்.
இதனிடையே ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த அரக்கோணம் எம்.பி., கோ.அரி ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, டிடிவி தினகரன் கட்சியிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்றார். மேலும், அமைச்சர்கள் முதல் அடிப்படை உறுப்பினர்கள் வரை அனைவருமே, டிடிவி தினகரன் கட்சியிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அதிமுக எம்.எல்.ஏ வெற்றிவேல் செய்தியாளர்களிடம் பேசியபோது, “கட்சி சசிகலாவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதமர் மோடி, தம்பிதுரை மூலம் சசிகலாவிடம் ஆதரவு கேட்டார். இது உண்மை. நன்றியை மறந்துவிட்டு யாரும் பேசக்கூடாது. கோ.அரி போன்று தவறு செய்பவர்களை கிள்ளி எறியவும் தெரியும். டிடிவி தினகரன் தொடர்பான விமர்சனங்களுக்கு, முதலமைச்சர் பழனிச்சாமி இனியும், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் போல் மவுனம் காக்கக் கூடாது.. என்று விமர்சித்தார்.