நைஜீரியாவில் ஆளும் கட்சி படுதோல்வி; முன்னாள் சர்வாதிகாரி புகாரி அதிபராகிறார்

Buhari-nigeria நைஜீரியா நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில், ஆளும் கட்சி தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான முகமது புகாரி வெற்றி பெற்றுள்ளார். அவர், அந்நாட்டு அதிபராகவுள்ளார். முன்னாள் சர்வாதிகாரியான முகமது புகாரி (72) தற்போதைய அதிபர் குட்லக் ஜோனாத்தானை விட 25 லட்சம் கூடுதல் ஓட்டுகளைப் பெற்றார். இவர், கடந்த 1980களில் நைஜீரியாவை ஆட்சி செய்தவர். தற்போது, நான்காவது முறையாக, வரும் மே 29ம் தேதி அதிபராக பொறுப்பேற்க உள்ளார். எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்று நைஜீரியா. உள்நாட்டு போர், லஞ்சம் ஊழல் என, அந்நாடு போதிய வளர்ச்சியை எட்டவில்லை. நைஜீரியாவின் அதிபராக மக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த குட்லக் ஜொனாதன் இருந்து வருகிறார். அவர், கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார். இருப்பினும் அங்கு செயல்பட்டு வரும் போகோ ஹராம் அமைப்பை அவர் ஒடுக்கத் தவறிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டிவந்தனர். போகோ ஹராம் பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதோடு, சிறுமிகளை கடத்திச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. ஜொனாதன் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்து வந்த நிலையில், அதிபர் தேர்தல் நடைபெற்றது. போகோ ஹராம் தீவிரவாதிகளின் அச்சுற்றுத்தலுக்கு மத்தியில் நடந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் நேற்று முதல் வெளிவரத் தொடங்கின. இதில் பெரும்பாலான இடங்களில் முகமது புகாரி முன்னிலை வகித்தார். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பல தொகுதிகளில் அவர் வெற்றிபெற்றுள்ளார். இதையடுத்து, நைஜீரிய நாட்டின் அதிபராக முகமது புகாரி பொறுப்பேற்க உள்ளார். நைஜீரியா, 1960ஆம் ஆண்டு, இங்கிலாந்திடம் இருந்து விடுதலை பெற்று பின்னர், பல்வேறு ராணுவப் புரட்சிகளையும் ஆட்சிக் கவிழ்ப்புகளையும் சந்தித்தது. 1999ல் நைஜீரியாவில் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் குட்லக் ஜோனாதான் வெற்றி பெற்றார். இரண்டாவது முறையாக அதிபராகும் அவரது கனவு இப்போது தகர்ந்துள்ளது. நைஜீரிய வரலாற்றில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த அதிபர், தேர்தலில் தோல்வி அடைவதும் இதுவே முதல் முறை.