லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சம்மன் – புத்தாண்டுப் பரிசு: மகிந்த ராஜபட்ச

மகிந்த ராஜபட்ச இலங்கை அதிபராக இருந்த போது ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், அமைச்சர் பதவியை ஒருவருக்கு வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் கொடுக்கப்பட்ட புகாரை அடுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்பு ஆணைக் குழு சம்மன் அனுப்பியது. இது குறித்து ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய மகிந்த ராஜபட்ச, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவினால் அனுப்பப்பட்டுள்ள சம்மன் – புத்தாண்டு பரிசு என்று கூறியுள்ளார். திஸ்ஸ அத்தநாயகவுக்கு நான் அமைச்சர் பதவியை வழங்கியதில் ஊழல் என்று கூறப்படுகிறது. ஒரு நாட்டின் அதிபராக இருப்பவர் அந்நாட்டு அமைச்சரவையில் ஒருவரை அமைச்சராக நியமிக்க முடியாவிட்டால் அந்தப் பதவியே தேவையற்றது என்றார் ராஜபட்ச. இலங்கை அதிபர் தேர்தலின்போது எதிர்க்கட்சி வேட்பாளருக்கு அமைச்சர் பதவி அளிக்க ராஜபட்ச முன் வந்ததாகவும், இதன் மூலம் எதிர்க்கட்சியை விட்டு வெளியேற அந்த வேட்பாளருக்கு ராஜபட்ச லஞ்சம் அளிக்க முயன்றதாகவும் ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடைபெறும் விசாரணையில் நேரில் ஆஜராகி பதிலளிக்குமாறு மகிந்த ராஜபட்சவுக்கு ஊழல் தடுப்பு ஆணையம் சம்மன் அனுப்பியது. புதிய அதிபர் மைத்ரிபால சிறீசேன பதவியேற்றதிலிருந்து ராஜபட்ச மீதும், அவரது சகாக்கள் மீதும் பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.