ராஜபட்ச வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்த ஆணைக்குழுத் தலைவர் சம்மதம்

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் இருப்பிடத்துக்கே சென்று விசாரணை நடத்த, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுத் தலைவர் ஜெகத் பாலபத்தபென்டி சம்மதம் தெரிவித்துள்ளதாக, இலங்கை பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபட்சவை ஏப்.24ஆம் நாள் விசாரணைக்கு ஆஜராகும்படி, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழு சம்மன் அனுப்பியது. இது, கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோஷம் இட்டனர். இதனிடையே லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுத் தலைவர் பாலபத்தபென்டியிடம் சபாநாயகர் நேற்று பேசினார். அப்போது, மகிந்த ராஜபட்சவின் இருப்பிடத்துக்கே சென்று அவரிடம் வாக்குமூலம் பெற ஆணைக் குழுத் தலைவர் பாலபத்தபென்டி சம்மதம் தெரிவித்தாராம். இருப்பினும், இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து இலங்கை சபாநாயகர் இன்று அறிவிப்பார் எனத் தெரிகிறது.