பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் எம்பி-க்கள் ஏற்க மறுத்து விட்டதையடுத்து பிரதமர் பதவியிலிருந்து தெரசாமே கடந்த ஜூன் மாதம் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இதனையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் பிரிட்டன் பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. கன்சர்வேட்டிவ் கட்சியை பொறுத்த வரை கட்சி தலைவர் பதவியை அலங்கரிப்பவரே, நாட்டின் பிரதமர் நாற்காலியிலும் அமர வைக்கப்படுவார்.
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் தேர்வு செய்யப்பட்ட பின்னர், தெரசாமே பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்று முறைப்படி தனது ராஜினாமா கடிதத்தை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்திடம் அளிக்க உள்ளார்.
இந்நிலையில் ஆளும் கட்சி தலைவர் மற்றும் பிரதமர் பதவிகளுக்கு முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் மற்றும் வெளியுறவு துறை உயரதிகாரி ஜெர்மி ஹன்ட் ஆகியோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது,
ஏற்கனவே ஆளும் கட்சியை சேர்ந்த உயர்மட்ட குழு உறுப்பினர்கள் 1,60,000 பேர் தங்களது வாக்குகள் பதிவு செய்துவிட்ட நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதனிடையே போரிஸ் ஜான்சன் தலைமை பண்புமிக்கவர் என சகபோட்டியாளர் ஜெர்மி ஹன்ட் புகழ்ந்துள்ளார். போரிஸ் திறமை மிக்கவர் அவரது தலைமை மூலமாக பல்வேறு வரலாறுகள் படைக்கப்பட்டுள்ளன. கட்சி மற்றும் ஆட்சியில் பல முக்கிய திட்டங்களை முன்னெடுத்து சென்றதில் அவருக்கு முக்கிய பங்குண்டு என்றார் ஜெர்மி.
போரிஸ் ஜான்சன் – ஜெர்மி ஹன்ட் இருவரில் யார் பிரிட்டன் பிரதமர் என்ற கேள்விக்கு இன்று விடை கிடைத்து விடும்,