
தமிழ்த் திரையுலகில் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்த நடிகர் வடிவேலுவை, தனது அரசியல் பார்வையினால் கருணாநிதி இழுத்தாலும் இழுத்தார், அன்று முதல் வடிவேலுவின் வாழ்க்கை சின்னாபின்னாமாகி விட்டது.
வாய்ப்புகள் இன்றி, வரும் வாய்ப்புகளும் ஏதேதோ காரணங்களால் தட்டிப் போய், புலம்பிக் கொண்டிருக்கும் நிலைக்கு வந்துவிட்டார் வடிவேலு!
தற்போது, நடிகர் ஆர்.கே.விற்கு தர வேண்டிய ஒரு கோடி ரூபாய் பஞ்சாயத்தால் நடிகர் வடிவேலு நடிப்பதாக இருக்கும் கமல்ஹாசன், அஜித் படங்களுக்கும் சிக்கல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
‛இம்சை அரசன்’ பட பிரச்னையால் இரண்டு ஆண்டுகளாக புதுப்படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, பின்னர் நடிப்பதாக இருந்த ‛பேய்மாமா’ படமும் அவருக்குக் கைகொடுக்காமல், யோகிபாபு கைக்கு மாறி விட்டது.

தற்போது மீண்டும் அவர் புதிய படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. கமலின் ‛தலைவன் இருக்கிறான்’, அஜித்தின் ‛வலிமை’ படங்களில் வடிவேலு நடிக்க இருக்கிறார் என்று கூறப் பட்டது. அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகாவிட்டாலும், அரசல் புரசலாக வெளியானது. இதைக் கேட்டு வடிவேலுவுக்கு நெருங்கிய நண்பர்கள் போன் போடு வாழ்த்துச் சொல்ல, அப்போதே அவர் கொஞ்சம் பொறுங்கப்பா, அதிகாரபூர்வமா வரட்டும் என்று தயங்கியுள்ளார். இது குறித்து செய்தி வெளியானதும், மகிழ்ச்சியில் திளைத்த வடிவேலு ரசிகர்களுக்கு மீண்டும் ஓர் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தகவல் வெளியானது.
‛நானும் நீயும் நடுவுல பேயும்’ படத்திற்காக ரூ.1 கோடி முன்பணமாக வாங்கிக் கொண்டு, வடிவேலு தனது படத்தில் நடிக்கவில்லை என தயாரிப்பாளர் ஆர்.கே., தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் எந்தப் படத்தில் வேண்டுமானாலும் நடிக்கட்டும், நான் தடுக்கவில்லை. ஆனால் எனக்கு வர வேண்டிய ஒரு கோடி ரூபாயைத் திருப்பித் தராவிட்டால் அவர் நடிக்கும் எந்தப் படத்தையும் வெளியிடக் கூடாது என தெரிவித்துள்ளாராம்.
இதனால், வடிவேலு அடுத்து நடிக்க இருக்கும் கமலின் ‛தலைவன் இருக்கிறான்’, அஜித்தின் ‛வலிமை’ படங்களுக்கு சிக்கல் உருவாகி உள்ளது!
தலைவன் இருக்கிறான் படப்பிடிப்பு துவங்காத நிலையில் வடிவேலுவுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் வடிவேலு தரப்பு சோகத்தில் ஆழ்ந்துள்ளது