
இலங்கையின் தற்போதைய அதிபர் சிறீசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் 9-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி, பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. அதிபர் தேர்தலில் தங்கள் வாக்குகளை காலை முதலே ஆர்வமாக வாக்காளர்கள் அளித்து வருகின்றனர்.
அதிபர் பதவிக்கான தேர்தல் களத்தில் 35 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில், முன்னாள் அதிபர் ராஜபட்சவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான கோத்தபய ராஜபட்ச (வயது 70), முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாசா (52) ஆகியோருக்கிடையேதான் முக்கியப் போட்டி நிலவுகிறது.

இந்தத் தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபட்ச, வேட்பாளர்கள் கோத்தபய ராஜபட்ச, , சஜித் பிரேமதாசா உள்ளிட்டோர் காலையிலேயே சென்று வாக்களித்துவிட்டனர். காலை 10 மணி நிலவரப்படி 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் 80 முதல் 85 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகலாம் என்று கூறப் படுகிறது.
15.9 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க, 12,845 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன. இங்கே 22 மாவட்டங்கள் உள்ளன.
முன்னதாக, கொழும்புவின் வடக்குப் பகுதியில் 240கி.மீ., தொலைவில் தந்திரிமலே பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளில் வாக்களிப்பதற்காக திரட்டிக் கொண்டுவரப்பட்ட இஸ்லாமிய வாக்காளர்கள் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 5 மணி அளவில், வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் வாக்களிப்பது உறுதி செய்யப்படும்.
கடந்த 2015ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் 81.5% வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.