yugadhi wishes - 2026

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

ஆன்மிகக் கட்டுரைகள் Featured பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
yugadhi wishes - 2026

சாந்திரமான ஸம்வத்ஸராதி- உகாதி (19-03-2026) வியாழன் இன்று தொடங்குகிறது.

பொதுவாக வருஷம் என்பது சாஸ்திரப்படி ஸாவனம், சௌரம், சாந்திரம், நக்ஷத்திரம், பார்ஹஸ்பத்யம் என்பதாக ஐந்து வகைப்படும். 30 நாள் கொண்டது ஒரு மாதம், 360 நாள் ஒரு வருஷம், என்று கணக்கிடுவது ஸாவன வருஷம்.

சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்லும்போது மாதப்பிறப்பு என்று 12 மாதங்களை கணக்கிடுவது சௌரமான வருஷம். தமிழகத்தில் வசிக்கும் நாம் சௌரமானத்தையே பெரும்பாலும் பின்பற்றுகிறோம். சந்திரனின் போக்கையொட்டி (அமாவாசைக்கு மறுநாள் முதல்) கணக்கிடுவது சாந்திரமான மாதம்- வருஷம்.

நக்ஷத்ரங்களில் முதன்மையான அசுவதி நக்ஷத்ரத்தை மாதப் பிறப்பாகக் கணக்கிட்டு 27 நாட்கள் ஒரு மாதம் என்று 12 மாதங்களை கணக்கிடுவது நாக்ஷத்ரமானம். ஜோதிஷ சாஸ்திரப்படி தசைகள், புக்திகளின் அளவுகளைக் கணக்கிட இது உபயோகப்படுகிறது.

பிருஹஸ்பதி என்னும் குரு கிரஹத்தின் ராசி மாறுதலை வருஷப் பிறப்பாகக் கொள்வது பார்ஹஸ்பத்ய வருஷம். ஆக இவ்வாறு ஐந்து விதமாக வருஷ ஆரம்பம் கணக்கிடப்படுகிறது.

இவற்றில் கடைசியில் கூறப்பட்ட நாக்ஷத்ரம், பார்ஹஸ்பத்யம் ஆகியவை தர்ம சாஸ்திரத்தில் உபயோகமில்லை என்பதால் மூன்றுவித வருஷங்களே வழக்கத்தில் உள்ளது.

இவற்றில் சாந்திரமான ஸம்வத்ஸரம் என்னும் வருஷம் பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்த பிரதமையான இன்று தொடங்குகிறது. தெலுங்கு – கன்னட – மொழி பேசும் மாநிலங்களில் வசிப்பவர்களுக்கும் – சாந்திரமான வருஷத்தை பின்பற்றும் சிலருக்கும் இன்று புதிய வருஷம் ஆரம்பம்.

ஸ்ரீராமநவமி போன்ற விரதங்கள் சாந்திரமானத்தை ஒட்டியே வருகின்றன. புத்தாண்டு அன்று செய்ய வேண்டிய எண்ணெய் தேய்த்துக் குளித்தல், புதிய ஆடை ஆபரணம் அணிதல், பஞ்சாங்க படனம் போன்ற செயல்கள் அனைத்தும் இன்று நடக்கின்றன.

யுகாதி – உகாதி

புது வருடத்தின் முதல் நாளைக் குறிப்பிடுவதில், களிதெலுங்கில் ‘உகாதி’ என்றும், கன்னடத்தில் ‘யுகாதி’ என்றும் உச்சரிப்பில் சிறிய வேறுபாடு மட்டும் உண்டு. மஹாராஷ்டிரத்திலும் கொங்கணத்திலும் இந்நாளை ‘குடி பட்வா’ என்றழைப்பார்கள். சிந்தி வகுப்பனருக்கோ இந்நாள் ‘சேத்தி சந்த்’ ஆகும். வசந்தத்தை வரவேற்கும் விதமாய் அமைந்த பொன்னாள். வசந்த நவராத்திரியின் முதல் நாளும் இதுவே.

ஒரு யுகாதி நாளில் தான் நான்முகன் படைப்புத் தொழிலையும், மஹாவிஷ்ணு காலக் கணக்கையும் தொடங்கினார்கள் என்பது ஐதீகம். அன்றுதொட்டு காலமெனும் சக்கரம் சுழன்றபடியே இருக்கிறது. இலைகள் உதிர்வதும், பின் துளிர்விட்டுப் பூத்துக் குலுங்குவதும் , தகிக்கும் கோடையும், பெய்யெனப் பெய்யும் மழையும், நடுக்கும் குளிரும் மாறிமாறி வருகின்றன.

உகாதியின் பொருள்:

உகாதி= உ+க+ ஆதி
உ -என்பது நக்ஷத்திரம்
க- என்பது கமனம் (கதி, செல்லுதல்)
ஆதி என்பது நக்ஷத்திரத்தின் கதியைவைத்து கணிக்கத் தொடங்கிய நாள்
என்று அனுசரிக்கப் படுவது. (அல்லது)
யுகாதி=யுக+ஆதி .
யுகங்களின் ஆதி முதல் கணிக்கப்படும் காலம்.

யுகாதிக்குத் தயாராக வீட்டுக்கு வெள்ளையடித்து, அன்று மாலைகளும், தோரணங்களும் கொண்டு அலங்கரிப்பார்கள். தலைக்கு எண்ணை தேய்த்துக் குளித்தபின் புத்தாடை உடுத்தி வழிபாடு செய்வார்கள்.

இந்த நாளில் படைப்பு தொடங்கப் பட்டதால் பிரம்மனுக்கு வழிபாடு பிரதானம். வீட்டு வாசலில் கோலமிட்டு ஒரு கழியையோ கொம்பையோ நிறுத்துவார்கள்.
அதை பிரம்மனாக பாவித்து சந்தனம், குங்குமம். மலர்களால் அலங்கரித்து தூபதீபம் காட்டி நெய்வேத்தியம் சமர்ப்பிப்பது வழக்கம். அதன் பின்னரே பூஜையறையில் வழிபாடு.

பூஜைக்குப் பின் அனைவருக்கும் கொஞ்சம் யுகாதி பச்சடி வழங்கப் படும்.
புளி, வேப்பந்தளிர் மற்றும் பூ, வெல்லம், உப்பு, மாங்காய், பச்சை மிளகாய் இவற்றால் செய்யப் பட்டதே இந்தப் பச்சடி. இனிப்பு, கசப்பு என்று அனைத்தும் கொண்டதே நம் வாழ்க்கை என்று உணர்த்தும் பச்சடி.

இதை உட்கொள்வதற்கு முன், ஒரு சிறிய சுலோகம் சொல்வது மரபு. கீழ்க்கண்ட சுலோகமே அது :-

சதாயு வஜ்ர தேஹாய சர்வ சம்பத் கராய ச
சர்வாரிஸ்ட வினாசாய நிம்பகம் தள பக்ஷணம்

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − seven =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.