
திருநெல்வேலி மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டியது அதிக பட்சமாக சேரன்மகாதேவி, பாளையங்கோட்டையில் 100 மி.மீ மழை பெய்தது. . கன மழை காரணமாக, குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லையில் பாளையங்கோட்டை, பேட்டை, சந்திப்பு உள்பட பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததது. நெல்லையில் 83 மில்லி மீட்டரும், பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி பகுதியில் 100 மில்லி மீட்டர் அளவுக்கும் மழை அளவு பதிவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் நெல்லையில் இன்று பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை விடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. ஆயினும் காலை 8 மணி வரை எந்தத் தகவலும் வராததால், மாணவர்கள் ஏமாற்றத்துடன் பள்ளிகளுக்குச் சென்றனர். இருப்பினும் ஓரிரு பள்ளிகள் தாங்களாகவே முன்வந்து, மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்திருந்தது
தூத்துக்குடியில் விடிய விடிய கனமழை கொட்டியது. இதில் மின்சார வாரிய அலுவலகத்துக்குள் மழை நீர் புகுந்து தேங்கியது. இதேபோல் திருச்செந்தூர், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடிந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி சுற்றுவட்டாரத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஐந்தருவி, பழைய குற்றால அருகளில் சீராக தண்ணீர் கொட்டுவதால் அங்கு மட்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.