பல நடிகைகள் துணிந்து தங்களுக்கு நேர்ந்த பாலியல் புகார்களை கூறினர்.
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கத்தை தானும் எதிர்கொண்டேன் என்று பிரபல பிக்பாஸ் நடிகை தெரிவித்துள்ளார்.
சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது என்று காலங்காலமாகப் பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கடந்த சில வருடங்களுக்கு முன் மீ டு புகார் எழுந்தது. ஹாலிவுட்டில் இருந்து தொடங்கிய இந்த புகார், இந்தியாவிலும் தொடர்ந்தது.
நடிகை தனுஸ்ரீ தத்தா உட்பட பல நடிகைகள் துணிந்து தங்களுக்கு நேர்ந்த பாலியல் புகார்களை கூறினர். இதனால் இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்போது வரை பல்வேறு நடிகைகள் இந்த பிரச்னையை எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த லாக்டவுன் நேரத்திலும் சில நடிகைகள் தங்கள் அனுபவத்தை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸ் நடிகை காஷ்மிரா ஷா, தானும் இந்த அனுபவத்தை எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இவர், தமிழில், திருமலை இயக்கத்தில் ஷாம் நடித்த அகம்புறம் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி இருந்தார். இந்தியில், எஸ் பாஸ், பியார் து ஹோனா ஹி தா, சாஸிஸ், ஜங்கிள், சிட்டி ஆஃப் கோல்ட் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
சின்னத்திரை தொடர்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து வரும் இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மிகவும் பிரபலமானார். ஹாட் புகைப்படங்களாலும் கிளாமர் காட்சிகளாலும் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டவர் இவர். இப்போது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகி விட்டாலும் கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
பட வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் சம்பவத்தை தானும் எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ள இவர் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு சினிமா துறையிலும் இது ஓர் அங்கமாகவே இருக்கிறது. நானும் கூட அப்படி ஓர் அனுபவத்தை எதிர்கொண்டேன். ஆனால் அதற்கு நான் உடன்படவில்லை. இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் என் திறமையை நம்பினார்கள்.
அதற்காக அவர்களுக்கு நன்றி. நான் ராம் கோபால் வர்மா, ஆசிஸ் மிர்சா, மகேஷ் மஞ்சரேக்கர் போன்ற முக்கியமான, புகழ்பெற்ற இயக்குனர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அதனால் என் சினிமா வாழ்க்கை குறித்து எனக்கு பெருமைதான். என் குழந்தைகள் வளர்ந்து, என் அம்மா சிறந்தவள் என்பதை அறிந்துகொள்ளும்போது நான் பெருமை படுவேன் என்று தெரிவித்துள்ளார்.