பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் லாஸ்லியா. இவருக்கென ஆர்மியெல்லாம் உருவானது. பிக்பாஸ் வீட்டில் கவினை காதலித்து அதனால் பல பிரச்சனைகளை சந்தித்து ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றார்.
இந்நிலையில், அவரின் தந்தை மரியநேசன் தற்போது திடீர் மரணமடைந்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்த போது தனது தந்தை 10 வருடங்களுக்கு முன்பே குடும்பத்தை விட்டு கனடா சென்றுவிட்டதாக லாஸ்லியா கூறியிருந்தார். தந்தையின் பாசத்திற்காக ஏங்குவதாகவும், இயக்குனர் சேரனை தந்தையாகவே பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.அதேபோல், பிக்பாஸ் வீட்டிற்கு லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் வந்த போது, கவின் காதல் விவகாரம் காரணமாக அவரை கண்டிக்க லாஸ்லியா கதறி அழுதது தற்போதும் ரசிகர்களின் கண்ணை விட்டு மறையவில்லை.
தற்போது அவரின் தந்தை மரணம் அடைந்துள்ளதால், லாஸ்லியாவுக்கு ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘லாஸ்லியா.. தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உலுக்குகிறது. எப்படித்தாங்குவாய் மகளே. சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்’ என பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் சேரன் தனது அப்பாவின் சாயலில் இருப்பதால், அவரை சேரப்பா என்றே லாஸ்லியா அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Source: Vellithirai News