மதுரை:
நடிகர் சிவகார்த்திகேயன் மீது கமல் ரசிகர்கள் தாக்குதல் நடத்தியதாக செய்தி பரவியது.
திருச்செந்துாரில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று காலை 7:25 க்கு, ஒரே விமானத்தில், நடிகர்கள் கமல், சிவகார்த்திகேயன், நடிகை ஹன்சிகா ஆகியோர் மதுரை வந்தனர். ரசிகர்கள் வரவேற்ற பின், கமல் புறப்பட்டுச் சென்றார். அதன் பின்னரும் கமல் ரசிகர்கள் அங்கேயே நின்றிருந்தனர்.
சுமார் 5 நிமிடங்கள் கழித்து அந்த வழியாக வந்த நடிகர் சிவகார்த்திகேயனை, பாதுகாப்பு கருதி பயணிகள் உள்ளே செல்லும் வழியாக வெளியேற, விமான நிலைய போலீசார் அனுமதித்தனர். அப்போது அவரை கமல் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.
இதனால் வேகமாக அங்கிருந்து செல்ல முயன்ற சிவகார்த்திகேயனை விரட்டிய ரசிகர்களில் ஒருவர், அவரது முதுகில் அடிக்க முயன்றார்; சிலர், அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, அவரை முதுகில் அடிப்பது போன்ற வீடியோ காட்சி, வாட்ஸ் அப், பேஸ்புக் மூலமாகப் பரவியது. இதுகுறித்து யார் தரப்பில் இருந்தும் போலீசில் புகார் அளிக்கப்படவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து விமான நிலைய போலீசார் கூறியபோது, இது எதிர்பாராதவிதமாக நடந்துவிட்டது. ரசிகர்கள் கூட்டமாக இருந்ததால், அவரை காணத்தான் வந்திருக்கிறார்கள் எனக் கருதி, மாற்றுப் பாதை வழியாக அழைத்து வந்தோம். அப்போது, சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினி முருகன்’ படத் தலைப்பு குறித்து ஒருவர், ‘கமென்ட்’ அடித்து அவரைத் தாக்க முற்பட்டார் என்றனர்.
ஆனால் இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கமலும், சிவகார்த்திகேயனும் ஒன்றாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிறகு ஒன்றாகவே விமானத்தில் சென்னை திரும்பினர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், சிவகார்த்திகேயனை எனது ரசிகர்கள் தாக்கியதாகக் கூறுவது உண்மையில்லை. நானும் சிவகார்த்திகேயனும் ஒன்றாகத்தான் மதுரையிலிருந்து வருகிறோம் என்றார். நடிகர் சிவகார்த்திகேயன் கூறும்போது, எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை… நன்றாகவே இருக்கிறேன் என்றார்.