அதளபாதாளத்தில் அரசுப் பள்ளிகள்! காமராஜர் கண்ட கல்விச் சேவை முடிவுக்கு வந்ததா?

தமிழகத்தின் 848 பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள். இதைவிட கொடுமை, 33 பள்ளிகளில் மாணவர்களே இல்லை என்று விருதுநகர் அருகே ஆமத்தூர் தனியார் பொறியியல் கல்லூரியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருக்கிறார்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பிள்ளைகளை கட்டாயப்படுத்தி அரசு பள்ளிகளில் சேர்க்க சட்டம் இடம் தராது. ஆனால் அரசு பள்ளிகளில் படித்தால் அரசு வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு, ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை, வசிப்பிடம் அருகேயே பணிபுரிய வாய்ப்பு என பல விஷயங்களை ஆரம்பித்து வைக்கலாம்..

அரசு ஊழியர் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பது அதிகமானால், அவர்களின் பிள்ளைகள் பொருட்டாவது அரசு பள்ளிகளில் உள்ள குறைபாட்டை களைய அக்கறை காட்டுவார்கள். காரணம், தனக்கு தனக்கு என்றால் அருவாளின் கைப்பிடிகூட களை வெட்டும்.

இன்றைய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகம். ஆனால் வேலை அப்படி இப்படித்தான்! ஆசிரியப் பணியைத் தவிர மற்ற அரசுப் பணிகளில் அவர்களை ஈடுபடுத்துவது அதிகம்!

காமராஜர் கல்விக்கண் திறந்தார் என்று இன்னும் எத்தனை காலத்துக்கு சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்?! அவர் திறந்த அந்தக் கல்விக் கண்ணை அடுத்த அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதல்லவா அரசின் கடமை! மாறாக அரசியல் வாதிகளின் பினாமிகளால் தனியார் பள்ளிகள் திறக்கப் படுவதும், உள்ளூரின் அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதும், கல்வியை ஏழைகளுக்கு எட்டாக்கனியாக்கும் மிகக் கேவலமான முயற்சியே அன்றி வேறொன்றாக இருக்க முடியாது!