நாதுராம் கோட்ஸே வைதீக பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். மும்பாய் – புனே (அன்றைய பம்பாய்-பூனா) வழித் தடத்திலிருந்த கம்ஷெட் ரயில் நிலையத்திலிருந்து பத்து மைல் தொலைவில் அமைந்திருந்த உக்ஸன் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்தவர்.
தந்தை வினாயக் கோட்ஸே தபால் துறையில் ஒரு சிறிய வேலையில் இருந்தார். 1892ல் தன்னுடைய பதினேழாவது வயதில் வினாயக் கோட்ஸேவுக்கு பத்து வயது சிறுமியுடன் திருமணம் நடந்தது.
வினாயக்கிற்கு முதலில் ஒரு ஆண் குழந்தையும், இரண்டாவதாக ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. முதலில் பிறந்த ஆண் குழந்தை இரண்டு வயது நிரம்புவதற்கு முன்னரே இறந்து போனது. அதன் பிறகு பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளும் கூட கைக்குழந்தைகளாக இருக்கும் போதே இறந்து போயின.
இருபதாம் நூற்றாண்டு தொடக்க காலங்களில், வீட்டில் பிறக்கும் ஆண் குழந்தைகள் இறப்பதும், பெண் குழந்தைகள் மட்டும் உயிர் பிழைத்திருப்பதும் ஒரு சாபத்தின் பயனாக நடைபெறுவதாக நம்பப்பட்டு வந்தது.
அதனைச் சரி செய்வதற்காக செய்யப்பட்டு வந்த பரிகாரம், நல்ல பலனை அளித்து வந்தது.
அது, அடுத்து பிறக்கும் ஆண் குழந்தையை பெண் போல வளர்ப்பது என்பது! இதன் மூலம் தோஷப் பரிகாரம் ஆகும் என நம்பினார்கள். ஆகவே, வினாயக்கும் அவரது மனைவியும் ஆண்டவனைப் பிரார்த்தித்துக் கொண்டார்கள்.
அடுத்து ஆண் குழந்தை பிறந்தால் அதை பெண் போல வளர்ப்போம் என உறுதி பூண்டார்கள். அடுத்து பிறக்கும் ஆண் குழந்தையின் இடது நாசிப் பக்கம் ‘ நாத் ‘ அதாவது மூக்குத்தி அணிவிப்பதாக வேண்டிக் கொண்டார்கள்.
அடுத்து குழந்தை 1910 ஆம் வருடம் மே மாதம் 19 ஆம் தேதி பிறந்தது. குழந்தைக்கு ராமச்சந்திரா என்று பெயர் சூட்டி அதனைச் சுருக்கி ராம் என்று அழைத்து வந்தனர்.
’நாத்‘ அணிந்த ராம் என்று அழைக்கத் தொடங்கி அது நாதுராமாகவே நிலைத்துப் போனது. துர்சக்திகளை திருப்திப்படுத்துவதில் நாதுராமின் பெற்றோர்களின் முயற்சி வெற்றி அடைந்தது.
நாதுராமும் அவரை பின் தொடர்ந்து பிறந்த மூன்று ஆண் குழந்தைகளும் திடகாத்திரமாக வளர்ந்தனர். அந்த மூன்று குழந்தைகளில் ஒருவரான கோபால் கோட்ஸே 1920ல் பிறந்தார்.
பின்னாளில் காந்தி கொலை வழக்கில் இவர் குற்றஞ்சாட்டப்ப்ட்டு ஆயுள் தண்டனை பெற்றார்.
பெண் குழந்தையாக குறிப்பிட்ட வயது வரை வளர்க்கப்பட்ட ஒரு ஆண் குழந்தையின் மனப்போக்குகள் எப்படி இருக்குமென மனோதத்துவ நிபுணர்கள் விளக்கம் அளிக்க முடியுமோ என்னவோ ?
( தொடரும் )
– எழுத்து: யா.சு.கண்ணன்