ஆப்தேயின் கைது மற்றும் விசாரணைக்குப் பிறகு, இந்திய பத்திரிகையாளர் (அவசரக்கால) சட்டத்தை ( INDIAN PRESS ( EMERGENCY ) ACT ) மீறிச் செயல் படுவதாகக் கூறி, கோட்ஸேயும் ஆப்தேயும், பலமுறை போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.
பின்னாளில், காந்தி கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரக் காலத்திற்கு முன்பாகவே, போலீசாருக்கு காந்தியை கொலை செய்ய ‘ ஹிந்து ராஷ்ட்ரா ‘ (’அக்ரனி‘ தினசரி ஒரு காலக்கட்டத்தில் இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது) ஆசிரியரும், அவரோடு சேர்ந்து வேறு சிலரும் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்தது.
ஆனால் இந்த தகவல்கள், நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் காவல்துறைக்குள் இருந்த உட்பூசல் மற்றும் பொறாமை காரணமாக, காந்தி கொலையின் போது, பூனாவில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக இருந்த DEULKAR ஐ எட்டவே இல்லை.
அதனைப் பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.
அதற்கு முன்…. ‘ அக்ரனி ‘ தினசரி,காந்திக்கு எதிரான ஆப்தேயின் போராட்டத்தை செய்தியாக வெளியிட்ட விதமே வித்தியாசமாக இருந்தது. தினசரியின் முதல் பக்கத்தில்,ஒரு புறம் காந்தி,இன்னொரு புறம் ஆப்தே படத்தை போட்டு,
‘’ பாகிஸ்தான் உருவாக்கத்திற்கு நீ ஒப்புக் கொண்டதால் உன்னை நூறு முறை தூற்றுகிறேன் ‘’ என்று ஆப்தே கூறுவது போல வடிவமைத்திருந்தது. இவையெல்லாம் காந்தி கொலையின் விசாரணை போது ஆதாரங்களாக, ஆவணங்களாக ஆயின.
ஹிந்து மகா சபா அரசியல் பணிகள் ஒரு புறம், பத்திரிகை பணிகள் ஒரு புறமென இருந்தாலும், சற்றும் சளைக்காமல் உத்வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்த ஆப்தேக்கு, காந்திக்கு எதிரான ‘ பஞ்சக்னி ‘ போராட்டத்திற்குப் பிறகு, தன் பள்ளி மாணவி மனோரமா சால்வியேயிடமிருந்து தன்னை பார்க்க வரும்படியாக ஒரு கடிதம் வந்தது.
அவரும் சுறுசுறுப்பாக மனோரமா சால்வியைக் காண பம்பாய் புறப்பட்டுச் சென்றார்.
( தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
– எழுத்து: யா.சு.கண்ணன்