October 22, 2021, 2:40 am
More

  ARTICLE - SECTIONS

  கற்கோவிலும் சொற்கோவிலும் : வாரியார் சுவாமிகளின் வார்த்தை விளக்கம்!

  variyar swamigal - 1

  வயிற்றுப் பசிக்கு உணவகம் ! அறிவுப் பசிக்கு நூலகம் ! ஆண்மப் பசிக்கு ஆலயம் ! மனதை நிறைத்து ஆண்மாவிற்கு ஆனந்தம் தரும் ஆலயங்களே பாரத நாட்டின் செல்வங்கள். மகேந்திர பல்லவன், இராஜராஜசோழன், இராஜேந்திரசோழன், சுந்தர பாண்டியன், சேரன் செங்குட்டுவன் போன்ற மன்னர்கள் எழுப்பிய ஆலயங்கள், இன்றும் விழியை வியப்பாக்கி மனதை நிறைவாக்கி வருகின்றன.

  ஆலயம் எழுப்பத் தேவை ஆள்பலமோ, பணபலமோ அல்ல ! அன்பும் பக்தியும் இருந்தால் ஆலயம் கட்டி விடலாம். இதற்கு உதாரணம் நாம் எல்லாம் அறிந்து போற்றும் பூசல நாயனார். மாறா அன்புடன் அவர் மனதில் கட்டிய சிவாலயம். இருதயத்தில் அவர் கட்டிய இருதயாலீசுவரர் கோவில். பல்லவ மன்னன் அழைத்தபோது அதை மறுத்து ” திருநின்றவூரில் பூசலார் கோவில்
  குடமுழுக்கிற்கு நாளை செல்கிறேன் ” என்று எம்பெருமான் ஈசனே காண விரும்பிய ஆலயம் பூசலார் மனதில் கட்டிய கோவிலே!.

  சொற்கோவில் :

  அறுபத்து மூன்று நாயன்மார்களிண் அருள்வரலாற்றை சேக்கிழார், பக்திச்சுவை நனி சொட்டச் சொட்ட ‘ திருத்தொண்டர் புராணம் ‘ எனும் பெரியபுராணமாகப் பாடியது சொற்கோவிலாகும். சொற்கோவிலை புலவர்கள் படித்து உணர்ந்து பக்தியில் உயர்வர். ஆனால் படிக்காத பாமரன் வழிபட கற்கோவில் தேவை. கல்வி அறிவில்லாத வேடன் கண்ணப்பன் போல, படிக்காத பக்தர்களும் நலம்பெற வேண்டி குன்றத்தூரில், சேக்கிழார் கற்கோவில் ஒன்றைக் கட்டினார். திருநாகேசுவரம் என்று பெயர் சூட்டினார். பாவலர் போற்றி வழிபட சொற்கோவிலும், பாமரர் சுற்றி வந்து வழிபட கற்கோவிலும் தந்த சேக்கிழாரிற்கு வழிகாட்டி மாணிக்கவாசகர். இனி அவரைச் சந்திப்போம்.

  கற்கோவில் :

  திருவாதவூரில் பிறந்து, அரிமர்த்தன பாண்டியன் அவையில் முதல் அமைச்சராய் திகழ்ந்தவர் மாணிக்கவாசகர். குதிரை வாங்கிட, அரசு பொற்குவியல்களுடன் முதலமைச்சர் திருப்பெருந்துறை எனும் ஊருக்கு வந்தார். அங்கு ஆலமரத்தில் கீழ் இருந்து சிவபெருமான் இவருக்கு ஞான உபதேசம் செய்தார். ‘ உயிர், உலகம், கடவுள் ‘ என்ற மூன்றின் உண்மை அறிந்த பிறகு, உலகப் பற்றை விட்டார்.

  போருக்கு உதவும் குதிரைகளை வாங்க வந்த பணத்தால் அருளுக்கு உதவும் கோவிலைக் கட்டி முடித்தார். திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் கட்டிய கோவிலைப் பார்த்து வழிபட்டவர் சிவனருள் பெற்றனர். இவருக்காக குதிரை வியாபாரியாகவும், மண்சுமக்கும் கூலியாளாகவும் சிவபெருமானே வந்து பிரம்படியும் பெற்றார். கற்கோவிலைக் கட்டிய மாணிக்கவாசகர், கல்லைப் பிசைந்து மனியாக்கும் ‘ திருவாசகம் ‘, ‘ திருக்கோவையார் ‘ ஆகிய சொற்கோவிலும் கட்டினார். திருவாசகத்திற்கு உருகாதார், ஒருவாசகத்திற்கும் உருகார், என்ற பழமொழி இவரது பாடலின் அருமையைக் காட்டும். கறிஸ்தவப் பாதிரியாரான ஜி.யு. போப் போன்ற மற்ற மதத்தவரையும் வணங்க வைக்கும் சொற்கோவில் கட்டியவர் மாணிக்கவாசகர்.

  திருப்போரூர் :

  நானூறு ஆண்டுகளுக்கு முன், மதுரையிலிருந்து மீனாட்சியம்மை அருள்பெற்று வந்தவர் சிதம்பர சுவாமிகள். தனது அருள் உணர்வால் பெண்பனைமரத்தின் அடியில் புதையுண்டு கிடந்த முருகன் சிலையை வெளியே எடுத்துக் கோவில் கட்டியவர். சிதம்பர சுவாமிகள் கோவில் கட்டத் தேவையான நிதியை மக்களுக்கு திருநீறு அளித்தும், நோய் தீர்த்தும் பெற்றார். ஆலயம் பெரிதாகக் கட்டி முடித்துப் பின் ஒரு மடமும் கட்டினார். இதோடு நின்றுவிடவில்லை, பக்தர்கள் முருகனைப் பாடிப் பயன்பெறவும் தங்கள் வேண்டுதலை விண்ணப்பமாய் பாடிடவும், இதுவரை எந்தப் புலவரும் பாடா வகையில் திருப்போரூர் சந்நிதி முறை என்ற 726 பாடல்கள் கொண்ட தோத்திர நூலை இயற்றினார்.

  பாமரர் கூடித்தொழ ஆலயமும், பக்தர்கள் பாடித்தொழ பாடல்களும் அமைத்தார். எளிமையும், இனிமையும் நிறைந்த திருப்போரூர் சந்நிதி முறையிலிருந்து இதோ ஒரு பாடல்…..

  சங்கம் – சாலை – கொடி :

  பதினோறாம் வயதில் பாடத்தொடங்கி தனது ஐம்பதாண்டு வரையில் 6000 திருவருட்பா பாடல்கள் பாடி ஆன்ம நேயத்தையும், ஜீவ காருண்யத்தையும் எடுத்துக் காட்டியவர் அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார். பாடலோடு தன் பக்தி உணர்வை அடக்கிக் கொள்ளாமல், பாமரனும் பின்பற்றும் வகையில் ‘ சமரச சன்மார்க்க சங்கம் ‘ எனும் சங்கத்தை நிறுவினார். இலவச உணவு வழங்க ‘ சத்திய தருமச் சாலை ‘ அமைத்து அன்னதானம் செய்தார். ‘ சன்மார்க்க போதினி ‘ என்ற தமிழ், சமஸ்கிருத, ஆங்கில போதனா மொழி பள்ளி நிறுவினார். ‘ சித்திவளாகம் ‘ , ‘ சத்திய ஞான சபை ‘ என்ற பெயரில் வடலூரில் ஜோதி வழிபாடு செய்ய அறுகோண ஆலயத்தைக் கட்டினார். சன்மார்க்கக் கொடி, சங்கம், தருமசாலை யாவனவும் அமைத்தார்.சொற்கோவில், கற்கோவில் மட்டுமல்லாமல் அன்னதான சாலை, பாடசாலை முதலிய யாவையும் அமைத்து, ஆன்மீக மறுமலர்ச்சி கண்டவர் வள்ளலார் இராமலிங்க அடிகளார்.

  வயலூர் – வடலூர் திருப்பணி :

  அமுதமொழி அரசர் கிருபானந்த வாரியார் சுவாமிகள் முத்தமிழில் மூழ்கி முத்தெடுத்தவர். இசையும் வேதமும் கற்றவர். நயமிக நாவரசர் என்றுதான் பலரும் இவரை அறிவர். ஆனால் இவர் பல்லாயிரம் பாடல்கள் இயற்றிய பாவரசரும் ஆவார். ‘ காங்கேய நல்லூர் தலபுராணம் ‘ இயற்றியவர் இவர். 5000 செய்யுள்களில் மகாபாரதம் ஆதிபர்வத்தையும், முருகம்மை புராணத்தையும் பாடியவர். 150 நூல்கள் இயற்றியதுடன் திருப்புகழ் முழுமைக்கும் உரை எழுதியவர். 37 ஆண்டுகள் ‘ திருப்புகழ் அமுதம் ‘ எனும் மாத இதழை நடத்தியவர்.

  திருச்சிக்கு அருகில் உள்ள குமாரவயலூர் முருகன் கோயிலின் திருப்பணியைத் தாமே நடத்தி முடித்துக் குடமுழுக்கு செய்தவர். வடலூர் சத்திய ஞான சபையின் தொண்டினையும் நேரடியாகச் செய்து, திருப்பணி முடித்து குடமுழுக்கு செய்து வைத்தார். வயலூருக்கும் – வடலூருக்கும் திருப்பணி செய்திட தனது சொற்பொழிவுத் தொகையைச் செலவிட்டு, முருகனது திருவருள் பெற்றவர் வாரியார் சுவாமிகள்.

  நடமாடும் கோவில்கள் :

  உழவாரப் பணியுடன் கலந்து, தேவாரம் பாடிய அப்பர் அடிகளின் பாட்டுக்கு இறைவன் அதிக பொற்காசுகள் தந்து அருளினான். அதுபோலவே, கற்கோவில் கட்டியதுடன் பொற்கோவிலும் கட்டிய மாணிக்கவாசகர், சேக்கிழார், சிதம்பர சுவாமிகள், வள்ளலார், வாரியார் சுவாமிகள் போன்றவர்களின் பாடல்களும் வரலாறும் மனதைக் கரையவைக்கும் ஆற்றல் பெற்றன. ஏனெனில் அவர்கள் ” நடமாடும் கோவில்கள் ” அல்லவா !

  நன்றி,
  மோக்ஷப்ரதர்சினீ.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,575FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-