chidambaram tihr - 2026

ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அக்டோபர் 24-ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு அனுமதி அளித்துள்ளது தில்லி நீதிமன்றம்!

ஐஎன்எக்ஸ் மீடியா நிதி முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ., கைது செய்தது. தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார் ப.சிதம்பரம். இது தொடர்பான வழக்கு விசாரணை, தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குகர் முன் நடைபெற்று வருகிறது.

சிபிஐ.,யைத் தொடர்ந்து, ஐஎன்எக்ஸ் மீடியா நிதி முறைகேடு வழக்கை அமலாக்கப் பிரிவும் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் திஹார் சிறைக்குச் சென்று விசாரணை நடத்தலாம். தேவைப்பட்டால் அவரைக் கைது செய்யலாம் என்று தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதை அடுத்து, நேற்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தில்லி திஹார் சிறைக்குச் சென்று ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில், அவரை கைது செய்வதாகவும் அறிவித்தனர்.

இந்நிலையில், சிபிஐ., காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று அவரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறியது நீதிமன்றம். இதன்படி, ப.சிதம்பரம் திகார் சிறையில் இன்று ஆஜர்படுத்தப் பட்டார். அப்போது சிதம்பரத்தின் காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து உத்தரவிடக் கோரி சிபிஐ., தரப்பில் கோரிக்கை வைக்கப் பட்டது. ஆனால் அதனை நீதிபதி ஏற்கவில்லை.

ALSO READ:  நூல் அறிமுகம்: The Significance of Sri Aurobindo Ashram in the Evolution of Humanity

சிதம்பரத்தை அக்.24ம் தேதி வரை காவலில் வைக்க அனுமதி வழங்கிய நீதிபதி அஜய் குமார் குஹர், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அதே நேரம், சிதம்பரத்தின் வயது கருதி அவருக்கு வீட்டு உணவு அளிக்கப் படவும், சிறையில் தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகள் செய்து தரவும் அறிவுறுத்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending