
தெலுங்கு மொழியின் மூத்த பத்திரிக்கையாளர் ‘சக்ரவர்த்துல ராகவாச்சாரி’ இன்று காலமானார்.
விசாலாந்திரா தினச் செய்தி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சக்கரவர்த்தி ராகவாச்சாரி இன்று அதிகாலை காலமானார். சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் ஹைதராபாதில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராகவாச்சாரி இன்று அதிகாலை காலமானார்.
பொதுமக்கள் பார்வைக்காக ராகவாச்சாரியின் உடல் ஹிமாயத்நகரில் உள்ள சிபிஐ அலுவலகம் ‘முக்தும்’ பவனுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சிபிஐ தலைவர்கள் நாராயணா, ‘சாட’ வெங்கடரெட்டி, ராமகிருஷ்ணா, விசாலாந்திராவின் கௌரவ சேர்மன் ‘முப்பாள’ நாகேஸ்வர ராவ் முதலானோர் ராகவாச்சாரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மிகவும் நேர்மையும் கட்டுப்பாடும் கொண்ட மனிதர் என்று புகழ்ந்து பேசினர். வெங்கடரெட்டி அவருடனான தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். எத்தகைய விஷயமானாலும் தைரியமாக எடுத்துரைக்கக் கூடியவர். அவர் போன்றவர்களை மிகவும் அரிதாகவே காணமுடியும். அவருடைய இழப்பு பத்திரிகை உலகுக்கு பேரிழப்பு என்றார்.

ஆந்திர முதல்வர் ஒய்எஸ் ஜெகன்மோகன்ரெட்டி ராகவாச்சாரியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார். பத்திரிக்கை உலகின் விழுமியங்களை காப்பாற்ற உழைத்தவர் என்றும் எதிர்காலத் தலைமுறைக்கு ராகவாச்சாரியின் எழுத்துக்கள் ஸ்பூர்த்தி அளிப்பவை என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.
இன்று மாலை விஜயவாடாவில் உள்ள விசாலாந்திரா அலுவலகத்துக்கு அவருடைய உடல் எடுத்துச் செல்லப்படுகிறது. விஜயவாடாவில் அவருடைய உடலுக்கு குடும்பத்தினரால் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தெரிகிறது.
ராகவாச்சாரி வரங்கல் மாவட்டம் பாலகுர்த்தி மண்டலம் சாதாபுரம் என்ற கிராமத்தில் 1939 செப்டம்பர் 10-ஆம் தேதி பிறந்தார். பொறுப்புணர்வோடு கூடிய விழுமியங்களுக்கு வாழ்க்கை முழுவதும் கட்டுப்பட்ட கம்யூனிஸ்ட்டாகவும் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்ந்தார். சிபிஐ மாநில கண்ட்ரோல் கமிஷன் சேர்மன் ஆகவும் சிபிஐ தேசிய கண்ட்ரோல் கமிஷன் அங்கத்தினராகவும் சேவைகளாற்றியுள்ளார்.
“தெலுங்கு பத்திரிகையாளர்களில் தனக்குவமை இல்லாத மேதாவி சக்கரவர்த்துல ராகவாச்சாரி என்றால் அது மிகையில்லை. தெலுங்கு ஆங்கிலம் சமஸ்கிருத மொழிகளில் தேர்ந்த அறிஞர். நேர்மையே வடிவானவர். அத்தகைய தூய நேர்மை அவருடைய தனிமனித வாழ்விலும் தொழிலிலும் வெளிப்பட்டது.

சம்பிரதாயமான ‘அஷ்டகோத்ர’ பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர். ஐந்தாம் வயதிலிருந்தே பிரபந்தங்கள், பழமையான காவியங்கள், ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களைப் பயின்றார். அவருக்கு ஆங்கிலம் தெலுங்கு உருது கற்பிப்பதற்கு மூன்று ஆசிரியர்களை நியமித்தனர் அவர் பெற்றோர். சமஸ்கிருதம் பயில்வதற்காக அவரை ஆந்திராவில் உள்ள ‘பொன்னூரு’ க்கு அனுப்பினர்.
சிகந்திராபாத் அருகில் உள்ள லாலகுடா ரயில்வே பாடசாலையில் பதினோராம் வயதில் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்தார். 1953 ம் ஆண்டிலிருந்தே ராகவாச்சாரி விசாலாந்திரா செய்தித்தாளை படிக்க ஆரம்பித்தார். நிஜாம் கல்லூரியில் சேர்ந்த பின் குடுமையை எடுத்துவிட்டார். பியுசியில் உஸ்மானியா பல்கலைக்கழகம் முழுமைக்கும் ஆறாவது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றார்.
உஸ்மானியாவில் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் இரண்டாம் ஆண்டில் அதை நிறுத்திவிட்டு வரங்கல் சென்றே பிஎஸ்சி யில் சேர்ந்து படித்தார். கம்யூனிஸ்ட் கட்சித் தொடர்பு கொண்ட மாணவர் சங்கத்தில் சேர்ந்தார். கல்லூரி மாணவர் சங்கத்தின் முதன்மைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு அதிக அளவு மெஜாரிடியோடு வென்றார்.
பட்டப்படிப்பை முடித்தபின் ஹைதராபாத் வந்து சட்டம் பயின்றார். அகில பாரத வித்யார்த்தி பரிஷத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். அப்போது உஸ்மானியாவில் எம்ஏ ஆங்கிலம் படித்துக் கொண்டிருந்த எஸ் ஜெய்பால் ரெட்டி போன்றோர் தீவிரமாக எதிர்ப் பிரச்சாரம் செய்தும் ராகவாச்சாரி மிகப் பெரும் வெற்றி பெற்றார். சட்டப் படிப்பில் மேலும் எல் எல் எம் பயின்றார்.
1969 – 71 இடையில் அவர் டெல்லியில் இருந்து வெளிவரும் இடதுசாரி தொடர்பான பேட்ரியாட் என்ற ஆங்கில பத்திரிகையில் நிருபராக பணியாற்றினார். 1971 ல் விஜயவாடா சென்று விசாலாந்திரா பத்திரிகையில் நிருபராகச் சேர்ந்தார். சிறிது காலத்திற்குள்ளாகவே அதன் ஆசிரியராக உயர்ந்தார். 30 நீண்ட ஆண்டுகள் விசாலாந்திராவின் ஆசிரியராகப் பணியாற்றினார். அவருடைய எடிட்டோரியல்கள் எளிதாகவும் தெளிவாகவும் இருக்கும். தெளிவும் சுருக்கமுமான எழுத்து அவருடைய ஸ்டைல்.
‘தெலுங்கு பத்திரிகையாளர்களின் பரிணாமம், பரிசோதனை, பிரயோஜனம்’ என்ற கட்டுரையில் தெலுங்கு பத்திரிக்கை உலகில் பயன்படுத்தும் மொழி ஆதாரப்பூர்வமானது அல்ல என்று வருத்தம் தெரிவித்தார். விஜயவாடாவிலும் பிற இடங்களிலும் சொற்பொழிவு ஆற்றுவதற்கு அவருக்கு அதிக அளவுக்கு அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன.
மிகச் சிறப்பான சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். அவருடைய பேச்சில் வார்த்தைக்கு வார்த்தை நையாண்டி மிளிரும். அவர் தன்னை உயர்வாக காட்டிக்கொள்ள என்றுமே முயன்றதில்லை. மேதாவியாக அவரை அனைவரும் கொண்டாடினாலும் எண்பது வயது நிரம்பிய ராகவாச்சாரி பழக எளிமையானவராக அனைவருடனும் நட்பாக இருந்தார். அவருடன் உரையாடுபவர்கள் யாரானாலும் அவருடைய அபாரமான விஷய ஞானத்தைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.
தெலுங்கு பத்திரிக்கைத் துறையில் அவர் செய்த சேவைகளை தெலுங்கு மக்கள் என்றும் மறக்க இயலாது. உதாரமான குணநலன் கொண்ட ராகவாச்சாரி ஒரு மேதாவியான பத்திரிக்கையாளர் என்பதில் சிறிதும் ஐயமில்லை” என்று சக்ரவர்த்துல ராகவாச்சாரியின் எண்பதாம் பிறந்தநாளன்று மூத்த பத்திரிக்கையாளர் ‘சென்னமனேனி’ ராஜேஸ்வரராவு புகழாரம் சூட்டினார்.
- ராஜி ரகுநாதன், ஹைதராபாத்.