நாடு முழுவதும் ஜே.இ.இ தேர்வு இன்று தொடக்கம்

என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி. உள்ளிட்ட மத்திய அரசு நிதியுதவியுடன் இயங்கும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ. பிரதான தேர்வு) நாடு முழுவதும் இன்று தொடங்க உள்ளது. சனிக்கிழமை எழுத்துத் தேர்வும், ஏப்ரல் 10,11-ஆம் தேதிகளில் இணைய வழித் தேர்வும் நடத்தப்பட உள்ளது. இதில் நாடு முழுவதும் இருந்து   13 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளனர். என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., ஐ.ஐ.டி. ஆகிய மத்திய அரசு நிதியுதவியின் கீழ் இயங்கி வரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்துகிறது. இந்தத் தேர்வு இரண்டு நிலைகளாக நடத்தப்படுகிறது. முதலில் ஜே.இ.இ. பிரதான தேர்வும், பின்னர் ஜே.இ.இ. முதன்மைத் (அட்வான்ஸ்டு) தேர்வும் நடத்தப்படும். இதில் ஜே.இ.இ. பிரதானத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள படிப்புகளில் சேர முடியும். ஜே.இ.இ. பிரதான தேர்வில் தகுதி பெற்று, அடுத்ததாக நடத்தப்படும் ஜே.இ.இ. முதன்மைத் தேர்விலும் தகுதி பெறுபவர்கள் ஐ.ஐ.எஸ்சி., ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் உள்ள படிப்புகளில் சேர முடியும். இப்போது 2015-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. பிரதானத் தேர்வின் எழுத்துத் தேர்வு சனிக்கிழமை நடத்தப்படுகிறது. வரும் 10,11 தேதிகளில் இணையவழி தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் இருந்து 13 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதுகின்றனர். இந்தத் தேர்வு முடிவு ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.ஜே.இ.இ.முதன்மைத் தேர்வு 24-5-2015 அன்று நடத்தப்பட உள்ளது. பிரதான தேர்வு தகுதிப் பட்டியலில் முதல் 1.50 லட்சம் பேர் மட்டுமே இந்த “அட்வான்ஸ்ட்” தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர்.