பாதுகாப்பாக இருக்கிறார் ராகுல்: சல்மான் குர்ஷித்

புது தில்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பாதுகாப்பாக உள்ளார். அவர் எங்கிருக்கிறாரோ அங்கு பாதுகாப்பாக இருக்கிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் விளக்கமாகக் கூறியுள்ளார். ராகுல் காந்தி எங்கே போனார், என்ன செய்கிறார் என்பது குறித்த கேள்விகள் தொடர்ந்து எதிர்க்கட்சிகளாலும், தொகுதி மக்களாலும் எழுப்பப் பட்டு வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்த முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சல்மான் குர்ஷித், “ராகுல் காந்தி எங்கிருக்கிறாரோ அங்கு பாதுகாப்பாகவே இருக்கிறார். அவரைப் பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை. ராகுல் காந்தி விரைவில் திரும்பி வருவார். ராகுல்தான் காங்கிரஸ் கட்சியின் கமாண்டர். அவர் ஊர் திரும்புவதை உலகமே கூர்ந்து கவனிக்கும். ஏனெனில் அவர் சிறப்பான சாதனை படைத்து திரும்புவார்” என செய்தியாளர்களிடம் கூறினார்.