புது தில்லி விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். நேற்று மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் இது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியபோது, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத்தினர், காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பிரதமரிடம் அளித்த மனு பெட்ரோலிய துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மன்னார்குடி பகுதியில் 667 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்காக ‘கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்’ என்ற தனியார் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டு இருந்தது. அந்த நிறுவனம் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது தொடர்பான முக்கிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. மேலும் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதியுடன் அந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் முடிவடைந்து விட்டது. ஆனால் அந்த பகுதியில் அந்த நிறுவனம் இதுவரை மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை. எனவே அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்த உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் தொடங்கி உள்ளது. தமிழகத்தில், இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்துக்கு (ஓ.என்.ஜி.சி.) மீத்தேன் எரிவாயு எடுக்கும் உரிமம் எதுவும் வழங்கப்படவில்லை.- என்று கூறினார்.
மீத்தேன் திட்டம் ரத்து: விவசாயிகளின் எதிர்ப்புக்குப் பணிந்தது மத்திய அரசு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari