பிரதமர் மோடி வரும் மார்ச் மாதம் 13ம் தேதி இலங்கை செல்கிறார். அவரது இந்த பயணத்தை முன்னிட்டு, தமிழக – இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தை வரும் 11-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியா – இலங்கை இருநாடுகளுக்கு இடையே உள்ள சர்வதேச கடல் பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பாக, தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதுடன், மீன்வளத்தை முற்றிலுமாக அழித்து வருவதாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். மேலும், இலங்கையில் அதிபராக சிறிசேனா ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழக மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளதாக இலங்கை மீனவர்கள் கூறுகின்றனர். இதனிடையே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 86 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் 10 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ந் தேதி இலங்கை செல்கிறார். அவர் தமிழர் பகுதியான யாழ்ப்பாணம், திரிகோணமலை உள்ளிட்ட இடங்களுக்கும் செல்வார் என்று தெரிகிறது. அவரது இலங்கை பயணத்துக்கு முன்பாக தமிழக-இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அதன்படி, இலங்கைக்கான இந்திய தூதர் ஒய்.கே.சின்கா நேற்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ஜோசப் மைக்கேல் பெரேராவை சந்தித்தார். அப்போது, இந்தியப் பிரதமரின் வருகைக்கு முன் மீனவர்கள் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதை ஏற்றுக் கொண்ட அவர், இதுதொடர்பாக வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரனையும் சந்தித்துப் பேசுமாறு கேட்டுக்கொண்டார். இதன்படி, தமிழக- இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளிடையே 11-ந் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடியின் இலங்கை பயணம்: இரு நாட்டு மீனவர்கள் மார்ச் 11-ல் பேச்சுவார்த்தை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari