பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தனது மனைவி, பிரான்ஸ் தொழில் அதிபர்கள் மற்றும் மந்திரிகளுடன் 4 நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவர்களை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.
இன்று ஜனாதிபதி மாளிகையில் இம்மானுவேல் மெக்ரானிற்கு பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு, அணு எரிசக்தி, இருநாடுகளுக்கு இடையிலான ரகசிய தகவல் பரிமாற்ற தடுப்பு உள்பட 14 முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையொப்பமாகின.
மேலும், பிரான்ஸ் நிறுவனத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானங்கள், நீர்நிலைகளை நவீனப்படுத்துதல், இந்தியாவின் ஸ்டெர்லைட் மற்றும் பிரான்ஸ் நாட்டின் ஏர் லிக்விட் நிறுவனத்துக்கு இடையில் தொழிற்சாலைகளுக்கு தேவையான எரிவாயு உற்பத்தி உள்பட 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான ஒப்பந்தமும் இன்று கையொப்பமானது.
இந்தியாவில் 20 கோடி யூரோக்கள் அளவிலான தொழில் முதலீடுகளை செய்ய பிரான்ஸ் முன்வந்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.