சிங்கப்பூர்:
எனது தந்தை ராஜீவ் காந்தி கொல்லப்படுவார் என்பது முன்னமே தெரியும்; அவரைக் கொன்றவர்களை நான் முழுமையாக மன்னித்துவிட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
5 நாள் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ளார் ராகுல் காந்தி. இங்கே ஐஐஎம் முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம், ‘ராஜீவ் காந்தி கொலையாளிகளை மன்னித்து விட்டீர்களா?’ என மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “மனித வெடிகுண்டு மூலம், ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின்னர், நானும் பிரியங்காவும் கடுமையான துயரத்தில் இருந்தோம். பல ஆண்டுகள் ராஜீவ் கொலையாளிகளின் மீது ஆவேசத்தில் இருந்தோம். ஆனால், இப்போது அவர்களை முழுமையாக மன்னித்து விட்டோம்” என்றார்.
“அரசியலில் நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்கு துணை நின்றால், நீங்கள் கொல்லப்படுவீர்கள். அதன் அடிப்படையில் தான் எனது பாட்டியும், தந்தையும் கொல்லப்பட்டார்கள். எங்கள் பாட்டியும், தந்தையும் கொல்லப்படுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும். எனது பாட்டி என்னிடம், தான் என்றாவது ஒருநாள் கொல்லப்படுவேன் என்று கூறியிருந்தார். அந்த அடிப்படையில்தான் நானும் என் தந்தையிடம், ‘நீங்களும் ஒருநாள் கொல்லப்படுவீர்கள் என்றேன்’ என்று ராகுல் வேதனையுடன் கூறினார்.
முன்னாள் பிரதம மந்திரிகளின் மகன் மற்றும் பேரன் என்ற ஒரு சிறப்புரிமையை நீங்கள் நினைத்துப் பார்க்கிறீர்களா எனக் கேட்டபோது, “நீங்கள் நாணயத்தின் எந்தப் பக்கத்தை சார்ந்து இருக்கிறீர்கள் … நிச்சயமாக நான் சில சிறப்புரிமைகளைக் கொண்டு அமர்ந்திருக்கிறேன். ஆனால் நான் இவ்வாறு வந்ததை ஒரு கடினமான சவாரி மூலம் இல்லை என்று மட்டும் சொல்ல முடியாது.”
“என் பாட்டி படுகொலை செய்யப்பட்டபோது எனக்கு 14 வயது. என் பாட்டியைக் கொன்றவர்களுடன் நான் பேட்மின்டன் விளையாடியிருக்கிறேன். அதன் பிறகு என் தந்தை கொல்லப்பட்டார். எனவே ஒரு குறிப்பிட்ட கடினமான சூழலில் வாழ்ந்தேன் … இரவு பகல் பாராமல், ஒரு 15 பேருடனேயே நாளைக் கழிக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டேன். ” என்று கூறியுள்ளார். அவரது பேச்சு, காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியால் பகிரப்பட்டது. இந்த வீடியோவை பலரும் பார்த்து வருகின்றனர்.