ராஞ்சி: கால்நடைத் தீவன ஊழலின் 4வது வழக்கில் பீகாரின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ரூ.30 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.30 லட்சம் அபராதமும் விதித்தது நீதிமன்றம். இதனால் அவருக்கு ஒட்டு மொத்தமாக இந்த 4வது ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்துள்ளது.
மொத்தம் ஐந்து வழக்க்கள் பதிவு செய்யப் பட்டன. அவற்றில் 4 வழக்குகளில் இதுவரை தீர்ப்பு வந்துள்ளன.
1994 -1996 கால கட்டத்தில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரான லாலு பிரசாத் யாதவ், காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றி முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார். அப்போது கால்நடைத் தீவனம் வாங்கியதாக போலியான ரசீதுகள் கொடுத்து, அரசுக் கருவூலத்தில் பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் குவிந்தன.
இது தொடர்பான புகாரை ஏற்று சிபிஐ., விசாரணை நடத்தியது.
சிபிஐ., விசாரணையில் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. அதன்பின், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த முறைகேடு தொடர்புள்ள அனைத்து வழக்குகளும், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இது தொடர்பாக ஐந்து வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்தது. இந்த ஊழல் அனைத்தும் காங்கிரசின் ஜெகன்னாத் மிஸ்ரா மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் லாலு பீஹார் முதல்வர்களாக இருந்தபோது நடந்தவை. இதுவரை அளிக்கப்பட்ட மூன்று வழக்குகளின் தீர்ப்பிலுமே லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இப்போது நான்காவது வழக்கிலும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப் பட்டது.
தும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.13 கோடி ரூபாய் எடுத்தததாக தொடரப்பட்ட நான்காவது ஊழல் வழக்கில் ஏற்கெனவே மார்ச் 19 அன்று லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிவ்பால் சிங் அறிவித்தார். லாலுவுடன் அவரது ஊழலுக்கு உடந்தையாக இருந்த மேலும் 17 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் இன்று தண்டனை அறிவிக்கப் பட்டது. அதன்படி, லாலுவுக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இதனிடையே தனது தந்தையின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறியுள்ளார் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ். அவரை சிறையில் தள்ளி உயிரை மாய்க்கப் பார்க்கிறது பாஜக., என்றும், வரும் தேர்தல்களில் தங்களின் வெற்றிக்கு தனது தந்தை லாலு பிரசாத் ஒரு தடையாக இருப்பார் என்பதால்தான், அவருக்கு 14 வருடங்கள் தண்டனை கொடுத்து சிறையில் தள்ளியுள்ளது பாஜக.,அரசு என்றும் கூறியுள்ளார் தேஜஸ்வி யாதவ். தற்போது லாலுபிரசாத் யாதவுக்கு 69 வயது ஆகிறது.