சீதையே உலகின் முதல் `டெஸ்ட்டியூப் பேபி’ என உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் தினேஷ் ஷர்மா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில் நடைபெற்ற திறன் மேம்பாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் பேசிய உத்தரப் பிரதேச துணை முதல்வர் தினேஷ் ஷர்மா, தற்கால நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துடன் பண்டைய காலத்தில் இருந்த அறிவியலையும் ஒப்பிட்டுப் பேசினார். அப்போது ராமாயண காலத்திலேயே ‘டெஸ்டியூப் பேபி’ முறை இருந்ததாகவும், முதல் ’டெஸ்டியூப் பேபி’ சீதைதான் என்றும் கூறியுள்ளார். அவர் கூறிய கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சீதை குறித்த உத்தரப் பிரதேச துணை முதல்வரின் கருத்துக்கு பீகார் மற்றும் நேபாளத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், சீதை குறித்து பேசுவதற்கு முன்பாக கடந்த புதன் கிழமை பண்டைய காலத்திலேயே கூகுல் இருந்தது என்று தினேஷ் சர்மா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அதாவது மகாபாரத காலத்திலேயே தொடர்நேரலை தொடங்கி விட்டதாகவும், மகாபாரதப் போர்க் காட்சிகளை நேரலையில் பார்த்து, திருதராஷ்டிரருக்கு சஞ்சையன் விளக்கிக் கூறினார் என்று கூறியிருந்தார். மேலும், தற்போதுள்ள கூகுள் போல நாரதர் அனைத்துத் தகவல்களையும் அறிந்திருந்தார் என்றும் அந்தத் தகவல்களை அனைத்து இடங்களுக்கும் பரப்பவும் செய்தார் என்றும் அவர் கூறியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தின.