சுரேஷ் ஜீ நீங்க எப்படி இருக்கீங்க?: தமிழில் விசாரித்த மோடி! மகிழ்ச்சியில் மிதந்த மயிலாடுதுறை தமிழர்!

மயிலாடுதுறையில் டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்த தமிழர் சுரேஷை, அன்புடன் கேட்டு, மரியாதை செய்து, உற்சாகம் அளித்தார் பிரதமர் மோடி. அப்போது அவர், “சுரேஷ் ஜீ நீங்கள்… எப்படி இருக்கீங்க ?” என்று தமிழில் விசாரித்து அறிந்தார். அது இந்த உரையாடலில் உடன் இருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நாட்டின் கிராமப் புறங்களையும் முன்னேற்றப் பாதையில் இணைக்கும் டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம், சாதனை படைத்தவர்களுடன் பிரதமர் மோடி காணொளிக் காட்சி மூலம் தொடர்பு கொண்டு உரையாடினார். இது போன் நாட்டில் இதற்கு முன்னர் இருந்த எந்தப் பிரதமர்களும் சாதாரண மக்களுடன் தொடர்பு கொண்டு பேசியதில்லை என்பதால், இந்த நடைமுறைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வானொலி வாயிலாக மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் மன்கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சை மக்களால் மாதம் ஒரு முறை கேட்க முடிகிறது என்றாலும், ஒருவருக்கு ஒருவர் பார்த்து நேரடியாக காணொளி வழியே உரையாடும் முறையை பயனாளிகள் வரவேற்றுள்ளனர்.

இந்த உரையாடல்களின் போது, ஏழை, எளிய கிராமப்புற மக்களும் தொழில் நுட்ப வளர்ச்சியின் பயனை எளிதில் பெறுவதற்காகவே டிஜிட்டல் இந்தியா திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும், ரயில்வே பயணச்சீட்டுக்கான முன்பதிவு, கட்டணத்தைத் திரும்பப் பெறுதல் போன்ற சேவைகள், அனைத்துத் தரப்பினரும் ஆன்லைன் மூலம் பயனடையும் வகையில் எளிதாக்கப் பட்டிருக்கிறது என்று கூறினார் மோடி. பொதுமக்கள் அனைவரும் எளிதில் பயன்படுத்தும் வகையில், மத்திய அரசின் பொதுச் சேவை மையத்திற்கான வலைத்தளக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.