கர்நாடக மாநில அரசின் சார்பில் கெம்பேகவுடா ஜெயந்தி விழா நாளை பிரமாண்டமாக பெங்களூரு அரண்மனை மைதானத்தில் கொண்டாடப்படுகிறது. பெங்களூரு மாநகரை உருவாக்கிய கெம்பேகவுடா மன்னரின் ஜெயந்தி விழாவை மாநில அரசு மற்றும் பெங்களூரு மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இவ்வாண்டு விழா நாளை பெங்களூரு அரண்மனை மைதானத்தில் கொண்டாடப்படுகிறது.
இது குறித்து மேயர் ஆர்.சம்பத்ராஜ் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறுகையில், இவ்வாண்டு கெம்பேகவுடா ஜெயந்தி விழா இன்று கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கான விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக விதானசவுதாவில் விழா கொண்டாடப்படும். இவ்வாண்டு அரண்மனை மைதானத்தில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா நாளில் மாநகரின் நான்கு திசையில் இருந்து கொண்டு வரப்படும் கெம்பேகவுடா ஜோதி, சுதந்திர பூங்காவிற்கு வந்து சேரும். அங்கிருந்து ஊர்வலமாக அரண்மனை மைதானம் கொண்டு செல்லப்படும். வழியில் மாநிலத்தில் பல்வேறு நாட்டு புறகலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கெம்பேகவுடா ஜெயந்தி விழாவில் சாதி, மதம், பேதமில்லாமல் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர் களுக்கும் அழைப்பு விடுக்கப்படும். மாநகராட்சிக்கு உட்பட்ட 28 பேரவை தொகுதி உறுப்பினர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமில்லாமல், அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து துறையில் சாதனைப்படைத்த உண்மையான கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்கப்படும். விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். விழாவில் முதல்வர் குமாரசாமி, துணைமுதல்வர் பரமேஷ்வர் உள்பட மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள் என்றார்.