நிர்பயா பாலியல் கொலை வழக்கில் டெல்லி நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது
டெல்லியில்,ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கின் மறு சீராய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ம் தேதி, 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக, 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில், ஒருவர் சிறுவன் என்பதால் குறைந்த பட்ச தண்டனை அளிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளி ராம்சிங் என்பவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். முகேஷ், பவன், வினய், அக் ஷய் ஆகிய 4 பேருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், உச்சநீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், மரண தண்டனையை மறு சீராய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது கடந்த மே 4ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இன்று தீர்ப்பு அளித்தது.