முதிர்ச்சி அடைய பாபா ராம்தேவ் ஆசிரமத்துக்கு ராகுல் சென்று வந்தால் நல்லது: முக்தார் அப்பாஸ் நக்வி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தன் மகன் ராகுல் காந்திக்கு கட்சியின் வரலாறு குறித்து சொல்லிக் கொடுக்க வேண்டும் என பா.ஜ.க தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருமான முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.

மேலும் அவர் கூறும்போது ராகுல் காந்தி முதிர்ச்சி பெற யோகா குரு பாபா ராம்தேவ் ஆசிரமத்திற்கு ஒரு முறை சென்று வந்தால் நல்லது என்றும் கூறினார். முன்னதாக ராகுல் காந்தி, பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்பதை நிரூபிக்க சிபிஐ அல்லது அமலாக்கத் துறை விசாரணை நடத்த வேண்டுமென்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

பிரிட்டன் நிறுவனங்களுக்கான சட்டத் துறை அதிகாரிகளிடம் அளித்த ஆவணத்தில் தன்னை அந்நாட்டு குடிமகன் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார் என்று சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டியிருந்தார். தில்லியில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களிடையே நேற்று ராகுல் காந்தி பேசும் போது தன் மீதும் தன் குடும்ப உறுப்பினர்கள் மீதும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. பா.ஜ.க அரசுக்கு துணிச்சல் இருந்தால் என்னை கைது செய்து பார்க்கட்டும்.

நான் எந்த தவறும் செய்யவில்லை என கூறியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக முக்தார் அப்பாஸ் நக்வி ராகுல் காந்தி முதிர்ச்சி பெற யோகா குரு பாபா ராம்தேவ் ஆசிரமத்திற்கு ஒரு முறை சென்று வந்தால் நல்லது என்று கூறினார்.