செம்மரக் கடத்தலில் தமிழக ஆந்திர முன்னாள் அமைச்சர்களுக்குத் தொடர்பு?

ஆந்திராவில் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாகக் கூறி 20 தமிழர்களை ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார் என்கவுன்டர் என்று கூறி சுட்டுக் கொன்றனர். அவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரும் அப்பாவிகள் என்றும், ஆந்திர போலீஸார் திட்டமிட்டே இந்த என்கவுன்டரை அறங்கேற்றியுள்ளனர் என்றும் பிரச்னைகள் எழுந்துள்ள நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரின் செல்போன் எண்கள் சோதனை செய்யப்பட்டன. அதில், ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் எண்கள் அவற்றில் இருப்பது தெரிய வந்தது. மேலும் செம்மரம் வெட்ட தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் 16 ஏஜெண்டுகளும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் ஆந்திர போலீசார் நான்கு இடங்களில் சோதனை நடத்தினர். இதில் செம்மரங்களைப் பதுக்கி வைத்த சவுந்தரராஜன் என்பவரை ஆந்திரா போலீஸார் கைது செய்தனர். வெட்டிக் கொண்டு வரப்படும் செம்மரங்களை சவுந்தரராஜன் சென்னையில் உள்ள கடத்தல்காரர்கள் மூலம் பெற்று சீனா, பர்மா மற்றும் தென் கிழக்கு நாடுகளுக்கு அனுப்பிவைப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சித்தூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட சவுந்தரராஜனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 2 பேருக்கு செம்மரங்கள் கடத்தலில் நேரடித் தொடர்பு இருப்பதாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து அந்த இரு முன்னாள் அமைச்சர்கள் பற்றி ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்த முன்னாள் அமைச்சர் வட மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அது உறுதிப் படும் பட்சத்தில், ஆந்திர போலீசார் அவரைக் கைது செய்யக்க்கூடும் என்று கூறப் படுகிறது.