முன்பதிவு இல்லாத ரயில் ஓபன் டிக்கெட்டை செல்போன் மூலம் பெறலாம்

ரயில்களில் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளை செல்போன் மூலம் பெறும் புதிய வசதி அமலுக்கு வந்துள்ளது. ரயில்களில் முன்பதிவு இருக்கைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு முறை ஏற்கெனவே உள்ளது. ஆனால், முன்பதிவு இல்லாத இருக்கைகளுக்கு, ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில்தான் டிக்கெட் பெற வேண்டும். இதனால், பயணிகள் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் மணிக் கணக்கில் வரிசையில் நின்றுபயணச்சீட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இந்நிலையில், முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளையும் செல்போன் மூலம் பெறும் புதிய முறையை ரயில்வே அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம், முன்பதிவு இல்லாத ரயில் பயணச்சீட்டுகளை பயணிகள் இருந்த இடத்தில் இருந்தே ஸ்மார்ட்போன்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவு செய்யப்படும் பயணச்சீட்டை பிரிண்ட் எடுக்கத் தேவையில்லை. செல்போனில் தோன்றும் தகவலைக் காட்டினாலே போதும். மேலும், பயணச்சீட்டைப் பெறுவதற்காக பணத்தை இருப்பில் வைத்து செலுத்தும் வசதியும் உள்ளது. இந்தத் தொகையை இணையதளம் மூலமாகவோ, ரயில் நிலையங்களில் நேரிலோ செலுத்திக் கொள்ளலாம். அதேபோல், மாதாந்திர ரயில் பயணச் சீட்டுகளை புதுப்பித்து கொள்ளும் வசதியும் இந்த வகையில் இடம் பெற்றுள்ளது.