இந்தியாவில் 23 அங்கீகாரமற்ற போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசம், டெல்லியில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த 23 பல்கலைக்கழகங்களில் அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில் 8 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் ஒரு பல்கலைக்கழகம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அடுத்தபடியாக டெல்லியில் 7 பல்கலைக்கழகங்களும், மேற்குவங்காளம் மற்றும் ஒடிசாவில் தலா 2 பல்கலைக்கழகங்களும் உள்ளன.
கேரளா, கர்நாடகா, மராட்டியம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒரு அங்கீகாரமற்ற பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகங்களின் பெயர்களையும் UGC வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் புதுச்சேரியில் உள்ள ஸ்ரீபோதி அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன், கர்நாடகாவில் பாதகாவி சர்க்கார் வேர்ல்டு ஓபன் யூனிவர்சிட்டி எஜுகேஷன் சொசைட்டி, கேரளாவில் செயின்ட் ஜான்ஸ் யூனிவர்சிட்டி, மராட்டியத்தில் ராஜா அரபிக் யூனிவர்சிட்டி ஆகியவை இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.