வாக்காளர்களுக்கு மது கூப்பன் அதிர வைக்கும் பஞ்சாப் தேர்தல்

சண்டிகர் : பஞ்சாப் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அங்கு வாக்காளர்களுக்கு, வார இறுதி நாட்களில், மதுபானங்கள் சப்ளை செய்ய ஏதுவாக, முன்கூட்டியே, கூப்பன்கள் வினியோகிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
*போதை பழக்கம் அதிகரிப்பு*
பஞ்சாபில், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமை யில், அகாலி தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி உள்ளது. இங்கு, பிப்., 4ல், சட்டசபை தேர்தல் நடக்கிறது. பஞ்சாபில், மதுபானங்கள் மற்றும் போதை பொருட்கள் பழக்கம் அதிகரித்து இருப்பது, முக்கிய தேர்தல் பிரச்னையாக எதிரொலிக்கிறது. போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, ஆளும் கூட்டணி தவறி விட்டதாகக் கூறி, காங்., – ஆம் ஆத்மி கட்சி கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன.
*வாக்காளர்களுக்கு கூப்பன்*
இந்நிலையில், தேர்தல் கமிஷன் அதிகாரிகள், மாநிலம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுஉள்ளனர்; இதில், கட்டுக்கட்டாக பணமும், ஆயிரக்கணக்கான மதுபான பாட்டில்களும் பிடிபட்டு வருகின்றன. வார இறுதி நாட்களில், மதுபானங்கள் மற்றும் போதை பொருட்களை பெற வசதியாக, வாக்காளர்களுக்கு கூப்பன்களும் வினியோகிக்கப்பட்டு உள்ளன; அதில், ரம், விஸ்கி உள்ளிட்ட மதுபானங்கள் மற்றும் போதை பொருட்களின் பெயர்கள், தனித்தனியாக அச்சிடப்பட்டு, கூப்பன்கள் வழங்கப்பட்டு உள்ளன.
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, இது போன்ற ஏராளமான கூப்பன்களை, அதிகாரிகள், நேற்று முன்தினம் கைப்பற்றி உள்ளனர்.
*பரஸ்பரம் புகார்*
'அகாலி தள கட்சி பிரமுகர்கள், மதுபான ஆலைகளை நடத்தி வருகின்றனர். அவர்களே, கூப்பன்கள் வழங்கி வருகின்றனர்' என, காங்., குற்றஞ்சாட்டி உள்ளது. அதே சமயம், 'காங்., தலைவர் அமரீந்தர் சிங்கிற்கு சொந்தமான மதுபான ஆலைகளில் இருந்தே, வாக்காளர்களுக்கு, மதுபானங்கள் சப்ளை செய்யப்படுகின்றன' என, அகாலி தள கட்சி புகார் கூறியுள்ளது.