அம்மனுக்கு நகை செய்து தருவதாகக்கூறி பூசாரியிடம் 4 சவரன் திருட்டு

ரூ. 2 லட்சம் செலவில்
அம்மனுக்கு வெள்ளி அலங்கார வளையம்  செய்து தருவதாக கூறி
பூசாரியிடம் 4 சவரன் அபேஸ்
வண்ணாரப்பேட்டையில் நூதன திருட்டு
 
சென்னை, வண்ணாரப்பேட்டை பகுதியில், ரூ. 2 லட்சம் செலவில், அம்மனுக்கு வெள்ளியில் அலங்கார வளையம்  செய்து தருவதாக கூறி, பூசாரியிடம், 4 சவரன் செயினை நூதன முறையில் திருடி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
 
சென்னை, வியாசர்பாடி, எம்.கே.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன், இவர், புரசைவாக்கம் , பாதாள பொன்னியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். கடந்த 31மற்றும் 1ம் தேதி அன்று, இந்த கோவிலுக்கு’ கார்த்திக் என்பவர் வந்துள்ளார். விஸ்வநாதனிடம், தான் வெளியூரில் இருந்து வருவதாக தெரிவித்த அவர், வேண்டுதலின் பேரில், அம்மனுக்கு ரூ.2 லட்சம் செலவில் அலங்காரம் வளையம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, விஸ்வநாதனை அழைத்துக்கொண்டு கார்த்திக் பாரிமுனை வந்துள்ளார். வெள்ளியில் அலங்கார வளையம் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளார். பின்னர், விஸ்வநாதனை அழைத்துக்கொண்டு, வன்னாரப்பேட்டைக்கு கார்த்திக் வந்து, அங்குள்ள பிரபல துணிக்கடைக்கு சென்று, அம்மனுக்கு 10 ஆயிரம் மதிப்பிலான இரண்டு பட்டுப்புடவைகள் எடுத்துள்ளனர். அதை தொடர்ந்து, இரண்டு குர்தாவும் கார்த்திக் எடுத்துள்ளார்.
அதை கார்த்திக் போட்டு, அழகு பார்த்துள்ளார். அப்போது, பூசாரி கழுத்தில் கிடந்த 4 சவரன் செயினை கார்த்திக் போட்டுப்பார்க்க கேட்டுள்ளார். பூசாரி விஸ்வநாதன் தயங்கியபோது, கார்த்திக் கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்த பையை விஸ்வநாதனிடம் கொடுத்து கவனத்தை திசை திருப்பியுள்ளார். பணம் கையில் இருக்கும் தைரியத்தில், விஸ்வநாதன் 4 சவரன் செயினை கழட்டி காரத்திடம் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து, மற்றொரு குர்த்தாவை விஸ்வநாதன் போட்டுப்பார்க்க , டிரெஸ்சிங் அறைக்கும் கார்த்திக் அனுப்பி வைத்துள்ளார்.  அந்த நேரத்தில், கார்த்திக் தங்க செயினுடன் தப்பிவிட்டார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஸ்வநாதன், கார்த்திக் கொடுத்த பணப்பையை திறந்துப்பார்த்தார். அதில், வெள்ளை காகிதங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார் உடனடியாக வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி, துணிக்கடையில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..    
***
இராயபுரம் செய்தியாளர் இ.முகமது முஸ்தபா